Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.நா-வின் 70-வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கண்டுகொள்ளப்படாத தாஜ்மஹால்!

பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக் காக்கவும், உலக நாடுகளுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நீக்கவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கப்பட்டு,  உலகின் மிகப்பெரிய பொது அமைப்பாகக் கருதப்படும் ஐ.நா.சபையின் 70 வது ஆண்டு விழா, அக்டோபர் 24-ம் தேதி உலகம் முழுக்க வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

இதன் ஒரு கட்டமாக பல நாடுகளில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள் நீல நிறத்தில் மிளிரவுள்ளன.

இரண்டு உலகப் போர்களால் சிதையுண்டு, வேற்று கிரகத் தீவுகள் போல் ஆகிப்போன பல தேசங்களில், வேற்றுமை காரணமாக மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனித குலமே அழிந்துவிடும் எனக்கருதி வலிமை மிக்க ஒரு அமைப்பாக, பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்த 'ஐக்கிய நாடுகள்' சபை,  1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கப்பட்டது.

அகில வேற்றுமைகளை மறந்து ‘சமாதான விரும்பி’களாகத் திகழ நினைக்கும் நாடுகள்,  ஐ.நா.சாசனத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுப்பினர்களாகினர். இதன்படி தற்போது 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.சபை, தன் 70-ம் ஆண்டு விழாவை தன் பொது நிறமான நீல வண்ணத்தை,  உலக நாடுகளில் வெள்ளமாகப் பாய்ச்சிக் கொண்டாட முடிவுசெய்திருக்கிறது.

இந்த உலகப் பொதுச் சபையின் கொடி மற்றும் இலச்சினை நீல வண்ணம் கொண்டவை என்பதால், உலக நாடுகள் சபை ஒன்றுகூடி,  உலகின் 60 நாடுகளில் உள்ள 200 உலகப் பிரசித்திப் பெற்ற நினைவுச் சின்னங்களை,  நீல வண்ண விளக்கில் ஜொலிக்க வைக்க தேர்வு செய்துள்ளனர். இதில் பிரேசிலின் உயரமான ஏசுநாதர் சிலை, இத்தாலியின் பைசா கோபுரம், எகிப்து பிரமிடுகள், ஆஸ்திரேலியாவின் ஓபரா ஹவுஸ், ஜப்பானின் ஸ்கை ட்ரீ டவர், ஐ.நா-வின் தலைமை அலுவலகம் என உலகின் மேலும் பல இடங்கள் நீல நிறத்தில் அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதி இரவுகளில் பிரகாசிக்கவுள்ளன.

கொண்டாட்ட தினம் குறித்து ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் வெளியிட்ட அறிக்கையில், "உலகையே மிளிர வைக்கவிருக்கும் நீல நிற வெள்ளம், நாளைய வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுக்கும். சபையின் கொள்கைகளுக்கு ஆதரவளித்து அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளைப் பேணிக்காக்க உதவி வரும் உறுப்பு நாடுகளுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

உலக அதிசயங்கள் அனைத்தும் நீல நிறத்தில் மின்ன தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தாஜ்மஹால் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ராகினி ஆத்ம வெண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ