Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாத அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது: ஒப்புக்கொள்ளும் முஷாரஃப்!

லாகூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி அளித்தது என்று அந்நாட்டு முன்னாள் அதிபரும், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான பர்வேஸ் முஷாரஃப் ஒப்புக் கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சிக்கு  பர்வேஸ் முஷா ரஃப் அளித்துள்ள பேட்டியில், ''மத தீவிரவாதத்தை பாகிஸ்தான்தான் ஆரம்பித்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக சண்டையிடுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அழைத்து வந்தது.

கடந்த 1979-ம் ஆண்டில், பாகிஸ்தான் அரசு மதத் தீவிரவாதத்துக்கு ஆதரவாக இருந்தது. தலிபானுக்கு பயிற்சி அளித்து, ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட அனுப்பினோம். தலிபான்கள், ஹக்கானி, ஒசாமா பின்லேடன் (அல்கொய்தா முன்னாள் தலைவர்), ஜவாஹரி (அல்கொய்தா தலைவர்) ஆகியோர் கதாநாயகர்களாக திகழ்ந்தனர். பிறகு, அவர்கள் வில்லன்களாக மாறிவிட்டனர்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 1990-ம் ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்தது. அந்த சமயத்தில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் 11 அல்லது 12 பயங்கரவாத அமைப்புகள் உருவாகின. காஷ்மீரில் தங்களது உயிரைப் பணயமாக வைத்து சண்டையிடுவதற்கு அந்த அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவும், பயிற்சியும் அளித்தோம்.

காஷ்மீரில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஹபீஸ் சயீத் (லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு நிறுவனர்), ஜகியூர் ரஹ்மான் லக்வி (லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தலைவர்) உள்ளிட்டோர் பாகிஸ்தானில் கதாநாயகர்களாக பார்க்கப்பட்டனர். பிறகு, மதத் தீவிரவாதம், பயங்கரவாதமாக மாறிவிட்டது. தற்போது அவர்கள், பாகிஸ்தானிலேயே தங்கள் சொந்த மக்களை கொலை செய்கின்றனர். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ