Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காதல் கவிதையாளர் பாப்லோ நெருடா கொல்லப்பட்டார்'- சிலி அரசு ஒப்புதல்!

புகழ்பெற்ற எழுத்தாளரும் காதல் கவிதைகள் வடிப்பதில் நிகரற்றவருமாக  கருதப்பட்ட பாப்லோ நெருடா, சிலி சர்வாதிகாரி  பினோசெட்டால் கொலை செய்யப்பட்டதாக  சிலி அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து சிலி உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஸ்பெயினை சேர்ந்த பத்திரிகை 'எல் பைஸ்'செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பாப்லோ நெருடாவின் மரணத்துக்கு 3வது நபர்தான் காரணம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

சிலி பிரதமராக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  சல்வாடர் அல்வாண்டோவுக்கு பாப்லோ நெருடா நெருடா நெருங்கிய நண்பராக இருந்தார். இடதுசாரிய சிந்தனை கொண்ட பாப்லோ நெருடாவுக்கும், சல்வாடர் அல்வாண்டோவுக்குமிடையே நெருங்கிய நட்பு இருந்து வந்தது.

கடந்த 1973-ம் ஆண்டு  சிலியை,  சரிவாதிகாரி அகஸ்டோ பினோசெட் தலைமையிலான படையினர் கைப்பற்றினர். பிரதமர் சால்வாடர் அல்வாண்டோவின் மாளிகையை பினோசெட்டின் படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அல்வாண்டோ தற்கொலை செய்து கொண்டார்.

பினோசெட் ஆட்சி காலத்தில், அல்வாண்டோவுக்கும் பாப்லோ நெருடாவுக்கும்  நெருங்கிய நண்பராக இருந்த பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வந்தனர்.  ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாப்லோ நெருடாவுக்கு, தனது நண்பர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை அளித்தது. இதனால் சிலியில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சமடைய திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல அவர் திட்டமிட்டிருந்த ஒரு நாளுக்கு முன்னதாக,  சிலி தலைநகரான சான்டியாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு பாப்லோ நெருடா ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, (1973-ம் ஆண்டு  செப்டம்பர் 23-ம் தேதி)  அவர் இயற்கையான முறையில் மரணமடைந்ததாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அவரது மரணம் குறித்து, அவரது மனைவியும் கார் ஓட்டுநரும் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு  பாப்லோ நெருடாவின் உடலின் பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பல்வேறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. முதல்கட்ட ஆய்வில் எந்த விஷத்தன்மை கொண்ட பொருளும் அவரது உடல் பாகங்களில் காணப்படவில்லை என்று ஆய்வறிக்கை சொன்னது.

கடந்த 1971-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பாப்லோ நெருடாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ