Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகி வெற்றி!

ரங்கூன்: மியன்மார் நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று(ஞாயிறு) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார்.

ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சித் (யுஎஸ்டிபி)  தலைவர் ஹதே ஊ,  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  "நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது சொந்த தொகுதி மக்களுக்காக நிறைய நலத்திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறேன். இருந்தும் மக்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இத்தகைய தோல்வியைச்  சந்தித்தது ஏன் என்று இனிமேல்தான் ஆய்வு செய்வோம்" என்றார்.

மியான்மரில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் என்எல்டி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை ராணுவம் ஏற்க மறுத்துவிட்டது.

எனினும், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2010-ல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில், ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான யுஎஸ்டிபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் மியான்மரில் நடந்த இந்தத் தேர்தலில் மீண்டும் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.   

எடிட்டர் சாய்ஸ்

MUST READ