Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது போர் தொடுக்கும் ஹேக்கர்கள்! (வீடியோ)

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அனானிமஸ் (Anonymous) எனப்படும் ஹேக்கர்கள் அமைப்பு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.


பாரிஸ் நகரில், மக்களை கொன்று குவித்த ஐ.எஸ் அமைப்பின் மீது இணையம் வாயிலாக மிகப்பெரிய போர் தொடுக்கப் போவதாக, அனானிமஸ் அறிவித்துள்ளது.

யூடியூப் வாயிலாக, அனானிமஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றும் முகமூடி அணிந்த ஒருவர், கையில் உள்ள காகிதத்தை படித்தபடி ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போர் அறிவிப்பினை விடுக்கிறார்.

வீடியோவில் பேசும் அந்த நபர், "நவம்பர் 13-ம் தேதி, எங்கள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், இஸ்லாமிக் ஸ்டேட் என அறியப்படும் பயங்கரவாத அமைப்பினரான நீங்கள், மிகப்பெரிய தாக்குதலை நடத்தினீர்கள்.

இந்த தாக்குதல் மன்னிக்கத்தக்கதல்ல. அப்பாவி மக்களை கொல்லும் உங்களை, அனானிமஸ் அமைப்பினரான நாங்கள் கண்டுபிடிப்போம். உங்களை விடமாட்டோம். உங்கள் மீது மிகப்பெரிய போரை தொடுப்போம். பல இணைய தாக்குதல்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. போர் தொடங்கிவிட்டது. உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள், ஃப்ரெஞ்ச் மக்கள் உங்களை விட பலசாலிகள் என்பதை அறிய" எனக் கூறியுள்ளார்.

மேலும், தாக்குதலால் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, அனானிமஸ் அமைப்பினர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பான அனானிமஸ், கணினி மற்றும் இணையம் வாயிலாக, பேச்சுரிமை, மனித உரிமை, தகவல் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகளுக்காக போராடும் ஹாக்டிவிஸ்ட் (Hacktivist) எனும் அமைப்பு வகையைச் சார்ந்ததாகும். கை ஃபாக்ஸ் எனும் முகமூடியை அணிந்தபடி, இணையம் வாயிலாகவும், வீதிகளிலும் அனானிமஸ் அமைப்பினர் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

2014ம் ஆண்டு நடைபெற்ற மைக்கெல் ப்ரௌன் மற்றும் டாமிர் ரைஸ் ஆகிய இரண்டு கருப்பின அமெரிக்க இளைஞர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக குரல் கொடுத்து, அந்த இளைஞர்களை கொன்ற காவல்துறை அதிகாரிகளின் அடையாளங்களை வெளிகொண்டு வந்தனர் அனானிமஸ் அமைப்பினர்.

மேலும், சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது, பயங்கரவாதிகளின் வலைதளத்தை முடக்கினர். இப்போது, அனானிமஸ் அமைப்பின் கிளை அமைப்பான கோஸ்ட் செக்யூரிட்டி, ஐ.எஸ் அமைப்பின் வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீது குறி வைத்துள்ளது.


-ஜெ.விக்னேஷ் (மாணவ பத்திரிகையாளர்)      
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ