Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போர்க்குற்றம்: வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூக்கு உறுதியானது!

டாக்கா: போர்க்குற்ற வழக்குகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்து செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு எந்த நேரத்திலும் மரணத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
 

வங்கதேச  எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அலி ஆசான் முகமது முஜாகித்தும், மற்றொரு எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரியும் முந்தைய கலீதா ஜியா அமைச்சரவையில் பதவி வகித்தவர்கள்.

1971–ம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப்போரின்போது, இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதோடு, விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு படுகொலைக்கு ஆளான சம்பவங்களை திட்டமிட்டு அரங்கேற்றி செயல்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசினா, கடந்த 2010–ம் ஆண்டு போர்க்குற்ற விசாரணை நடத்த உத்தரவிட்டார். சர்வதேச குற்ற தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. அலி ஆசான் முகமது முஜாகித், சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோர் மீது டாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணை, சர்வதேச தரத்தில் அமையவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறை கூறின. ஆனால் வங்கதேச அரசு அதை மறுத்தது.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அலி ஆசான் முகமது முஜாகித் மீதான மரணத் தண்டனையை கடந்த ஜூன் மாதமும், சலாவுதீன் காதர் சவுத்ரி மீதான மரணத் தண்டனையை கடந்த ஜூலை மாதமும் உறுதி செய்தது.

இருப்பினும், இருவரும் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்கா தலைமையிலான 4 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து, மரணத் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். இது இறுதி தீர்ப்பாக அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து இருவரும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என வங்கதேசத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இருவர் சார்பிலும் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கான்த்கெர் மகபூப் உசேன் கூறுகையில், "இருவர் மீதான மரணத் தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து விட்ட நிலையில் இனி அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கமும், தண்டனை பெற்றவர்களும்தான் இது குறித்து சிந்திக்க வேண்டும். அரசு விரும்பினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம். தண்டிக்கப்பட்டிருப்பவர்கள், ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யலாம்" என்றார்.

அட்டார்னி ஜெனரல் மகபுபே ஆலம் கூறுகையில், "இருவரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இனி அவர்களை தூக்கில் போடுவதற்கு சட்டப்பூர்வமாக எந்தவொரு தடையும் இல்லை" என்று தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ