Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சீனா ஆவேசம்!

பெய்ஜிங்: ஐ.எஸ்.தீவிரவாதிகளை நிச்சயமாகக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கொந்தளித்துள்ளது.

சீனா மற்றும் நார்வே நாடுகளை சேர்ந்த பிணைக்கைதிகள் 2 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாகச்  சுட்டுக் கொன்று விட்டனர். இவ்விவகாரத்தால் கடும் சீற்றம் அடைந்து உள்ள சீனா,  கொலையாளிகளைக்  குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம் என்று அறிவித்துள்ளது.

சிரியா, ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நாடுகளுக்கு வருகிற மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை கடத்திச்சென்று, பிணைக்கைதிகளாக வைத்திருந்து, கொலை செய்வதை ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த பான் ஜிங்குய், நார்வே நாட்டின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டெட் ஆகிய 2 பேரை பிணைக்கைதிகளாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றால், இதற்காக ஒரு பெருந்தொகையை தர வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை விதித்திருந்தனர். இந்த நிலையில், இவ்விரு பிணைக்கைதிகளும் இப்போது கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்தியை,  படங்களுடன் தங்களது ஆங்கில பத்திரிகையான ‘தாபிக்’கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடந்த காட்சி, அந்த பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

இது ஐ.எஸ். தீவிரவாதிகள் எத்தகைய கொடூர மனம் படைத்தவர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாகி இருக்கிறது. அவர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்று கூறப்படவில்லை. இருப்பினும் அவர்களது தலைகளில் ரத்தம் வழிந்தோடி இருப்பது, துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான அறிகுறி என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
 
இந்த படுகொலைக்கு சீன அதிபர் ஜின் பிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘இந்த படுகொலைக்கு காரணமான ஐ.எஸ். தீவிரவாதிகளை நிச்சயமாகக்  குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்’ என்று கூறியுள்ளது.அதே போல நார்வே நாடும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ