Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரீஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது பிரான்ஸ்!

பாரீஸ்: ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதை  ஃபிரான்ஸ் அரசு உறுதி செய்துள்ளது.

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதல்களின் பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டவன், மொராக்கோவில் பிறந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அப்துல் ஹமீது அபாவுத் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

அவன் சிரியாவில் இருக்கக்கூடும் என நினைத்து,  ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து ஃபிரான்ஸ், போர் விமானங்கள் மூலம் சிரியாவில் கடும் தாக்குதல்களை நடத்தியது.

இந்நிலையில்தான் அவன், பாரீஸ் புறநகரான செயின்ட் டெனிஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் திடுக்கிடும் தகவல், தீவிரவாத தடுப்பு போலீஸ் படைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த படையினரும், ராணுவமும் நேற்று முன்தினம் அதிகாலை அங்கே விரைந்தன.

ஃபிரான்ஸ் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.20 மணிக்கு தொடங்கிய தாக்குதல், 7 மணி நேரம் நீடித்தது. துப்பாக்கி குண்டுகள் வெடிப்பு ஒரு புறம், வெடிகுண்டுகள் வெடிப்பு இன்னொரு புறம் என அந்த நகரமே போர்க்களமாக மாறியது.

முடிவில் ஒரு பெண் தீவிரவாதி, தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து, உடல் சிதறி பலி ஆனார். இன்னொரு தீவிரவாதி கொல்லப்பட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து கிடந்தார்.  அங்கிருந்த தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் யாருக்காக இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த தீவிரவாதி– அப்துல் ஹமீது அபாவுத் சிக்கினானா, கொல்லப்பட்டானா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது.

இதனையடுத்து அவன் கொல்லப்பட்டு விட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சியர், டெல்லியில் தெரிவித்தார். இருப்பினும் தன்னிடம் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார். இந்நிலையில் அவன் கொல்லப்பட்டு விட்டதை ஃபிரான்ஸ் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது தொடர்பாக அந்த நாட்டு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘போலீஸ் நடத்திய அதிரடி வேட்டையில் அப்துல் ஹமீது அபாவுத் கொல்லப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு உமிழ் நீர் சோதனை உதவியது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ