Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாலி ஹோட்டலில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 20 இந்தியர்களும் மீட்பு!

பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மாலியின் தலைநகர் பமாகோவில் உள்ள ரேடிசன் என்ற தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், பிணைக் கைதிகளை பிடிக்கும் நோக்கில் கடுமையாகத்  துப்பாக்கிச் சூடு நடத்தினர். விடுதியில் இருந்த 30 ஊழியர்கள், விடுதியில் தங்கியிருந்த 140 பேர்  என மொத்தம் 170 பேரை பிணைக் கைதிகளாக  சிறைபிடித்தனர்.

ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்கள் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும்  பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தீவிரவாதிகள் புகுந்துள்ள பகுதியை அந்நாட்டு காவல்துறையும், ராணுவமும் சுற்றி வளைத்துள்ளன. விடுதியின் அமைப்பு உள்ளிட்டவற்றை ராணுவத்தினர் ஆராய்ந்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற பாரீஸ் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து சர்வதேச நாடுகள் மீள்வதற்குள், மாலியில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.  “துப்பாக்கி சூடு சத்தம் ஹோட்டலின் 7-ம் தளத்தில் கேட்கிறது, ஜிகாதிகள் 7 ம் தளத்தின் மாடியில் உள்ள நடைபாதையில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்” என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாலியில் உள்ள அமெரிக்க தூதரகம் தன் நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. ஹோட்டலில் அமெரிக்கர்களும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடக்கு மாலியானது ஜிகாதிகள் பிடியில் உள்ளது.

'இந்தியர்கள் பத்திரம்'

இதனிடையே பிணைக்கைதிகளாக சிக்கி உள்ள இந்தியர்கள் 20 பேர் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் மாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த இந்தியர்கள் 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரை மீட்டுள்ள நிலையில், இன்னும் 138 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஜிகாதி பிரிவுகள் அல்-கொய்தா தீவிரவாத இயத்துடன் தொடர்பு உடையவை. இங்கு ஃபிரான்ஸ் தலைமையிலான ராணுவ நடவடிக்கையும்  எடுக்கப்பட்டு வருகிறது. மாலியில் இப்போது ஃபிரான்ஸ் படையை சேர்ந்த 1000 வீரர்கள் ஜிகாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். பமாகோவில் கடந்த மார்ச் மாதம், இதேப்போன்று பிரபலமான இன்னொரு ஹோட்டலில் தீவிரவாதத்  தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இது போன்ற சம்பவங்களால் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அச்சம் நிலவுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ