Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கு இலங்கையில் தடை நீக்கம்!

கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கான தடையை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அரசு பதவியில் இருந்தபோது விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 16 புலம் பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று அரசிதழ் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியை சந்தித்தார். தேர்தலில் வெற்றி பெற்று மைத்ரி பால சிறிசேனா புதிய அதிபரானார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சலுகைகள் அறிவித்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். கையகப்படுத்தப்பட்ட அவர்களது நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு பகுதியில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜபக்சே அரசால், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளனர். அதன்படி 8 அமைப்புகள் மற்றும் 155 தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணசேனன ஹெற்றியாராச்சி அரசிதழில் வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை தொடர்பான நிபுணரும், ஒபாமாவின் ஆலோசகரும், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதருமான சமந்தா பவர் இலங்கைக்கு வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உலகதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழர் தேசியசபை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய சபை ஆகிய 8 அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் இணைப்பு குழு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலக தமிழர் நிவாரண நிதியம், தலைமை செயலக குழு மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள 155 தனி நபரில் 22 பேர் கனடாவிலும், டென்மார்க்கில் 17 பேரும், இலங்கையில் 14 பேரும், இங்கிலாந்தில் 12 பேரும், நெதர்லாந்தில் 12 பேரும், பிரான்சில் 11 பேரும், ஜெர்மனியில் 8 பேரும், இந்தியாவில் 7 பேரும், இத்தாலியில் 4 பேரும், மலேசியாவில் 3 பேரும், நார்வேயில் 2 பேரும், அமெரிக்கா, தாய்லாந்தில் தலா ஒருவரும் வசிக்கின்றனர். இப்பட்டியலில் 2 சிங்களர்களும் இடம் பெற்றுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ