Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூறையாடப்பட்ட மசூதிக்கு சேமிப்பை நன்கொடையளித்த 7 வயது சிறுவன்!

மெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனான ஜேக் ஸ்வான்சன், தன் சேமிப்பு பணத்தை அவனது குடியிருப்புப் பகுதியிலுள்ள சூறையாடப்பட்ட மசூதிக்கு நிவாரண நிதியாக வழங்கியதற்காக அவனுக்கு ‘ஐ-பேட்’ பரிசாக கிடைத்துள்ளது.

 

பாரீஸ் நகரில் நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவின் ஆஸ்டின் நகரிலுள்ள ஃபயூகர்வில் மசூதியை, முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சூறையாடிவிட்டுச் சென்றுவிட்டனர். தீவிரவாத வன்முறை நிகழ்வுகளைத் தொடர்ந்து நடந்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மசூதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்தது. பொதுமக்கள், போலீசார் என அனைவரும் வந்து பார்த்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்ற நிலையில், அக்கூட்டத்திலிருந்த சிறுவன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாத நிலையிலும் தன் அம்மாவிடம் நிலவரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான்.

அதன்பின் யாரும் எதிர்பாராத நிலையில், அந்த 7 வயது சிறுவன் ஜேக் ஸ்வான்சன், தன் உண்டியலில் ஐ-பேட் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த 20 அமெரிக்க டாலர்களை மசூதி நிர்வாகிகளிடம் வழங்கினான். சிறுவனது செயலைப் பாராட்டி, அமெரிக்க முஸ்லிம்கள் சங்கம் ஸ்வான்சனை கௌரவப்படுத்தும் விதமாக நன்றிக் கடிதத்துடன் ஒரு ஐ-பேட் சேர்த்து வழங்கி உள்ளது.

இதுகுறித்து அம்மசூதியின் நிர்வாகக் குழு உறிப்பினரான ஃபைசல் நயீம் கூறுகையில், ''20 டாலர்கள் என்பது ஒரு பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீர்குலைந்த மசூதியின் சீரமைப்புப் பணிக்காக தன் சொந்த சேமிப்பில் சேர்த்து வைத்திருந்த பணத்தை தன் ஆசையை விட்டுக்கொடுத்து அளித்துள்ளான் ஜேக் ஸ்வான்சன். அந்த சிறுவனின் பெருந்தன்மைக்கான ஒரு சிறிய நன்றியாகவே அவன் விரும்பிய ஆப்பிள் ஐ-பேட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

ராகினி ஆத்ம வெண்டி

(மாணவ பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ