Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகள் குண்டு வீச்சில் மாலியில் ஐ.நா. ஊழியர் பலி: பான் கீ மூன் கடும் கண்டனம்!

பமாக்கோ: மாலியில் தீவிரவாதிகள் குண்டு வீச்சில்  ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பரிதாபமாக பலியான சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் ஆதிக்கம் செலுத்தி வந்த அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013-ம் ஆண்டு பிரான்ஸ் தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் கையோங்கி உள்ளது. அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மாலியில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட, ஐ.நா. சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தீவிரவாதத்துக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் அமைதி பிரசாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அமைதிப் படையை சேர்ந்த சிலர் கவுண்டம் நகரில் இருந்து திம்பக்டு நகருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிரவாதிகள் சிலர் அந்த வாகனங்களை வழிமறித்து குண்டுகளை வீசினர். இதில் ஐ.நா. ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்காத நிலையில், இந்த கொடூர செயலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற செயல்களால் மாலி மக்களையும், அமைதியையும் பாதுகாக்கும் ஐ.நா. சபையின் ஆதரவு நடவடிக்கைகளை தடுத்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ