Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உரிமைக்காக போராடி உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: சம்பந்தன்

ரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நாளை (27ம் தேதி) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனிடையே, மாவீரர் நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் கடும்போக்குடைய சிங்கள அரசியல்வாதிகளும், இலங்கை ராணுவத்தினரும், காவல்துறையினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், உரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி, அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதனை யாராவது தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

உயிரிழந்தவர்கள் மதிக்கப்பட வேண்டும். இதனைத் தடுக்க முயல்வது நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும். இதனை இந்த அரசிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன். இந்த நாடு ஜனநாயக நாடு என்றால், இது நல்லாட்சி என்றால், தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்றுகூடுவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் சுதந்திரம் உள்ளது.

தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகின்றது. அவர்களை நினைவுகூறுவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும்" என்று கூறினார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ