Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களங்களின் டைம்லைன்: மாவீரர் நாள் இன்று!

17ம் நூற்றாண்டு உலக நாடுகளின் முக்கியமாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு நாட்களின் தொடக்கம். வலிமை பொருந்திய ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் மற்ற நாடுகளை ஆட்டிப்படைத்தன. அந்த ஏகாதிபத்திய நாடுகள் மக்களை மிகக் கொடூரமாக நடத்தின. கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் விலங்கினும் கொடிதாக நடத்தப்பட்டனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமிழகத்தில் பல மன்னர்களும் பாளையக்காரர்களும் போராடினர்.
 

இலங்கையிலும் இரண்டாம் சங்கிலி மன்னன் என்ற மன்னன் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடினான். இந்தப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதன் பின் ஏகாதிபத்தியம் என்ற கொடூர நோய்க்கு ஆளான மக்கள் கொடூரமாக பிழிந்து எடுக்கப்பட்டனர். 17ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த ஆதிக்கங்களுக்கு சாவு மணியாய், 20ம் நூற்றாண்டில், கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சிக்கு, சோவியத் யூனியனை எழுச்சி பெற வைத்து முற்றுப்புள்ளி வைத்து, ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை துவக்கி வைத்தார், தோழர் லெனின். அங்கு ஆரம்பித்த ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான அடி, கியூபா, சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா என்று தொடர்ந்தது. ஆசிய நாடுகளை தன் கைப்பிடியில் இருந்து விடுவித்த ஏகாதிபத்தியங்கள், அங்கு அவர்களைப் போன்றே அந்நாட்டைச் சேர்ந்த ஏகாதிபத்திய குழுக்களிடம் ஆட்சியை ஒப்படைத்தன. இந்தியாவில் ஜாதி மதம் என்று இருந்த பிரச்னை இலங்கைத்தீவில் இனவாதமாக இருந்தது.

பெரும்பான்மை சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்சி தமிழ் மக்களுக்கு எதிராக பல கொடுமைகளைச் செய்தது. தமிழர்கள் ஆட்சிக்குள் வராதபடிக்கு சட்டம் இயற்றியது. மலையகத் தமிழர்களிடத்தில் இருந்து ஓட்டுரிமை பறிக்கப்பட்டது. சில பணத்தாசை பிடித்த தமிழ் அரசியல் வியாதிகள் சிங்களத்திற்கு ஒத்து ஊதியன. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்ற ஆரம்பித்தது சிங்களப் பெரும்பான்மை. தமிழர்கள் அமைதி வழியில் போராடினார்கள். படுகொலைகள் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஆயுதம் எடுக்கும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்றியது.
 

1982ம் ஆண்டு நவம்பர் 27 விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் இருந்த சமயம், விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் இருந்த செ.சத்தியநாதன் என்கிற லெப். சங்கர் படுகாயமடைந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை.
1989ம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், லெப்.சங்கர் உயிரிழந்த நவம்பர் 27ஐ மாவீரர் நாளாக, போரில் உயிரிழந்த தமிழ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் அந்நாளில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பேச்சிற்காக அனைத்து உலக நாடுகளும் காத்துக்கிடக்கும்.

2008ம் ஆண்டு தான் கடைசியாக அவரது பேச்சு வெளிவந்தது. 2009 போருக்கு பிறகு எந்த பேச்சும் வெளிவரவில்லை. ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டில், முதன்மைச் சுடர் ஏற்றி, மாவீரர் நாளினை, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டாடி வருகின்றனர். மேலும், ஃபேஸ்புக்கில் மாவீரர் நாளுக்காக ‘ரிமம்பரிங் தமிழ்ஸ்’ என்பதாக ஒரு ப்ரோஃபைல் ஓவர்லேயும் உண்டாக்கப்பட்டு பல்லாயிரம் பேர் அந்த ஃபில்டரை பயன்படுத்தி உள்ளனர். மாவீரர் நாளினை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் அங்கு புலி கொடி ஏற்றுவதையோ அல்லது மாவீரர் நாள் விழாவையோ தடை செய்து இருக்கிறது. தமிழகத்தில் காவல் துறையினர் இட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மாவீரர் நாள் கொண்டாட தடை இல்லை என்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. களங்களின் டைம்லைனில் இன்று மாவீரர் நாள்!


-ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close