Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதில் ஹெட்போன்...கையில் ஐபோன்...அதிசயித்துப் பார்க்கும் 44 ஆண்டுகளை சிறையில் கழித்த அமெரிக்கர்!

கரங்களில் எல்லோரும்  ரோபோக்களைப் போல, முகத்தில் உணர்ச்சி அற்றவர்களாகவே திரிகின்றனர். எவ்வளவு கூட்ட நெரிசல் இந்த நியூயார்க் நகரில் என்று கேட்டால்,கேட்பவரை வேற்றுகிரக வாசியைப் போலத்தான் பார்க்க தோன்றும்.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு நியூயார்க் அவரச வாழ்க்கைக்குப் பழகிய மனிதர்களைப் பார்க்க வேற்றுக் கிரக மனிதர்களை நினைவுபடுத்துகிறதாம். அதே நேரத்தில் இவரும் பலருக்கு வேற்றுக்கிரக வாசியாகத் தோன்றலாம். அவர் பெயர் ஒடிஸ் ஜான்சன்.அமெரிக்கர்.

பல வருடங்கள் முன்பு இந்த சமூகத்தின் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட அவர், மீண்டும் பரபரக்கும் இந்த சமூகத்தில் இணைந்துள்ளார்.அதனால் அவருக்கு வேற்றுக் கிரக உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க இயலாதது தானே.விண்வெளிக்குச்  சென்று திரும்புவது போல் இவர் நியூயார்க் நகரில்  இருந்து நீக்கப்பட்டது 1975 ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 25. மீண்டும் இந்த சமூகத்திலே இணைந்து கொண்டது 2014 இல், 69 ம் வயதில்.இளைஞராக சிறை சென்றவர் முதியவராக வெளியே வந்துள்ளார்.காலம் சிறைக்கு வெளியே பல்வேறு மாற்றங்களைப் புதுமைகளைக் கொண்டு வந்துள்ளது.இவை எதுவுமே அறியாத மனிதராக ஜான்சன் வாழ்ந்துள்ளார்.

தனது வாழ்நாளின் இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த ஒடிஸ் ஜான்சன், ஒரு காவலரைக்   கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 44  ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து தற்போது திரும்பி உள்ளார். சிறையில் இருந்து திரும்பிய ஜான்சனிடம் வழங்கப்பட்டது 2 பஸ் டிக்கெட் மற்றும் நாற்பது டாலர்களுடன் அவரது வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் அவரது ஐடி கார்டு. தன் குடும்பம், சொந்தம் பற்றிய மொத்த விபரங்களும் மறந்து,தொடர்புகள் அறுந்து அனாதையாக தெருவில் நின்ற ஜான்சனுக்கு அடைக்கலம் கொடுத்தது, ஹார்லெமில் உள்ள ஃபர்ட்டியூன் சொசைட்டி என்கிற நிறுவனம். இது வாழ்நாட்களை சிறையில் கழித்து மீண்டவர்களுக்காக நடத்தப்படும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜான்சன் தனது அன்றாட பணிகளை, ஒரு வியப்பான அதிசய நோக்கோடுதான் செய்து வருகிறார்.உலகம் அவருக்கு கணம்தோறும் வியப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் மசூதியில் தொழுகை செய்கிறார். உடலின் வலுவைக் காக்க "தாய்ச்சி" என்ற உடற்பயிற்சி செய்கிறார்; தியானம் செய்கிறார். பிறகு நியூயார்க் நகர வீதிகளிலே காலாற நடந்து விட்டு தன் வசிப்பிடம் வந்து சேர்கிறார். பெண்களுக்கான ஒரு பாதுகாப்பான இடம் உருவாக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பணம் திரட்டும் பணியிலும் தீவிரமாக இயங்கி வருகிறார் ஜான்சன்.இதே போன்று பல நூறு ஜான்சன்கள் நியூயார்க் நகர வீதிகளிலே என்ன செய்வது என்றே தெரியாமலே திரிந்துவருகின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள். ஆம், 2013 ல்  –ஏறத்தாழ 3,900 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள்!

அடுத்த ஆண்டு நவம்பரில் 6,000  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா சிறைக்  கைதிகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கையாக, விடுதலை செய்யும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய ஒபாமா, " இப்பொழுதும்  காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவர்கள் தவறு இழைத்துவிட்டனர்.அது அவர்களுக்கு ஒரு மோசமான நேரம். உதவி கிடைக்கப்பெற்றால் அவர்கள் நல்ல வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்" என்று குறிப்பிட்டார்.

2014 ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் மக்கள் தொகை 2005 ல் சரிவைக் கண்டுள்ளது. அதே நிறத்தில், 1999  முதல்  2014 வரை 55 வயது நிரம்பிய  சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 250  சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் 55  வயதிற்கு குறைவான சிறை கைதிகளின் எண்ணிக்கை 8  சதவீதமே கூடியுள்ளது. 1999 ல் மொத்த சிறை கைதிகளில் 3 சதவிகிதமாக இருந்த முதுமை வயது கைதிகளின் எண்ணிக்கை, 2014  ல்  10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் போதை பொருள் சமந்தமான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிதான நடைமுறையினால் 1,00,000 பேரில் 46,000 பேர் முன்னதாக விடுதலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் போதை பொருள் சமந்தப்பட்ட வழக்கில் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதுடன், கிரிமினல் குற்றத்திற்கான தண்டனையும் குறைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜான்சனைப் போன்ற முதுமை அடைந்த முன்னாள் சிறை வாசிகள் என்ன செய்வார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஒருவேளை, ஜான்சனைப் போல் ஒரு வசிப்பிடம் இல்லாமல் போகலாம். அல்லது அவர்களது பிள்ளைகளிடம் திட்டுக்களை வாங்கிக் கொண்டே போக்கிடம் இல்லாமல் வாழ்ந்து வரலாம். பசியைப் போக்கிக்கொள்ள ஏதாவது வேலை பார்த்து வரலாம். ஏன் என்னை விடுதலை செய்தார்கள் என்று தனிமையில் மனம் நொந்து வாடலாம். விரக்தி முற்றி தற்கொலை செய்ய கூட முயலலாம்.

வலுவான கம்பிகளுக்குப் பின்னால் தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த பல முன்னால் சிறை வாசிகளை பேட்டி கண்டுள்ள மரியக் லியம் என்ற ஆய்வாளர், வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் கடைகளில் காய்கறிகள் வாங்குவது வரை இவர்கள், பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதாகக்  கூறுகிறார். சிறையில் ஒவ்வொரு நாளின் வேலைகளும் முன்னரே தீர்மானித்து இருக்கும் பழக்கத்திற்கு வாழ்ந்த இவர்களுக்கு, தாங்களே ஒவ்வொரு நாளையும் முடிவு செய்வது கடினமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.


 

சிறை கைதிகளை விடுதலை செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்பது நல்ல விஷயமானாலும், அவர்களுக்கு சரியான போக்கிடம் இல்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்களை,நிற்கதியில்  விடுவதற்கு சிறைவாசம் எவ்வளோ மேல் என்று அவர்களை எண்ண வைக்காமல் அவர்களின்  புனர்வாழ்வுக்கான வழிவகைகளும் செய்யப்பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது போல் சிலர் போதாத காலத்தின் காரணமாக தவறு செய்து சிறை அனுபவித்தாலும், அவர்கள் திருந்தி வாழ ஒரு வழிவகை செய்தால் தான் சமூகம் மாறும்!

-ரமணி மோகனகிருஷ்ணன்(மாணவப் பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close