Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அநாதையாக நிற்கும் ஜெட் விமானங்கள்: விளம்பரம் மூலம் உரிமையாளரை தேடும் மலேசியா!

கோலாலம்பூர்: அநாதையாக நிற்கும் ஜெட் விமானங்களின் உரிமையாளரை பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில்,  3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக பல மாதங்களாக நிற்கிறது. இதையடுத்து அந்த விமானங்களின் உரிமையாளரை கண்டுபிடிக்க, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் பத்திரிக்கையில் விளம்பரம் செய்துள்ளனர்.

'த ஸ்டார் அண்ட் சின் சூ'  என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், '' TF-ARM, TF-ARN, TF-ARH  என்ற பதிவு எண் கொண்ட 3 போயிங் 747 -200F ரக விமானங்கள் எங்கள் விமான நிலையத்தில் உள்ளது.

இன்னும் 14 நாட்களுக்குள் இதன் உரிமையாளர் வந்து விமானத்தை கொண்டு செல்லவில்லையென்றால், இந்த விமானங்களை விற்பதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். உரிமையாளர் வரும் பட்சத்தில், விமானத்திற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், வருகின்ற 21-ம் தேதிக்குள் விமானத்தின் உரிமையாளர் வர வில்லையென்றால் அந்த விமானங்களை ஏலம் விட்டு விடுவோம் அல்லது எடைக்கு போட்டு விடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விமானங்களின் உரிமையாளர்களாக பலர் மாறி உள்ள நிலையில், கடைசியாக 2008-ம் ஆண்டு 'ஏர் அட்லண்டா ஐஸ்லாண்டிக்' என்ற நிறுவனம் இந்த விமானங்களை வாங்கி உள்ளது. மேலும், இந்த விமானங்களை தொடர்ந்து இயக்குவதற்கான பணம் இல்லாததே இப்படி விட்டுச் சென்றதற்கு காரணமாக இருக்கும் என்று கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ