Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமத்துவத்துக்கு உதாரணமாக அமைந்த சிகாகோ பள்ளி மாணவியர்!

மெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கான வேட்பாளர் போட்டியில் முக்கிய இடத்தில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், சில தினங்களுக்கு முன் "அமெரிக்காவுக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்ற மனிதநேயமற்ற தனது கருத்தை பதிவு செய்தார்.

மூன்றில் இரு பங்கு அமெரிக்கர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் உள்ள ஹிலாரி கிளிண்டன், இது மிகவும் வெட்கக்கேடான மற்றும் ஆபத்தான கருத்து என  குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா மட்டுமின்றி மேற்கத்திய நாடுகள் பலவற்றில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்களின் மீது, வெறுப்புணர்வு கூடிக்கொண்டே செல்கிறது. இதை "இஸ்லாமோஃபோபியா" என பல ஆங்கில ஏடுகள் குறிப்பிடுகின்றன.
 

இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள வர்னன் ஹில்ஸ் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த இதர சமய மாணவிகள் சிலர், மக்களின் மனதில், குறிப்பாக மாணவர்கள் மனதில் விளைவிக்கப்படும் மதவெறியை ஒழிக்க, இஸ்லாமிய பாரம்பரியப்படி, பெண்கள் தலையில் அணியும், "ஹிஜாப்" எனப்படும் துண்டினை, தங்களின் தலையில் அணிந்து, "வாக் ஏ மைல் இன் ஹர் ஹிஜாப் (Walk a mile in her hijab)" எனும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியினை நடத்தியுள்ளனர். அந்த பள்ளியின், இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பதினைந்திற்கும் அதிகமான இதர சமய மாணவிகள், தலையில் ஹிஜாப் அணிந்து கொண்டனர்.

இதற்கு ஆதரவளித்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களையும், மற்ற மாணவர்களையும், ஹிஜாப் அணிந்திருந்த மாணவிகளிடம், ஹிஜாப் குறித்து கேட்டு அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. "ஒரு மனிதர், ஒரு செயலை ஏன் செய்கிறார்? என்று நாம் உணரும் வரை, அவரை நாம் மதிப்பிட முடியாது" என இந்நிகழ்வு குறித்து பள்ளியின் மூத்த மாணவிகளில் ஒருவரான யாஸ்மின் அப்துல்லா கூறியுள்ளார்.

மாணவிகளின் செயலை பாராட்டிய பள்ளியின் முதல்வர், இந்த நிகழ்வு, இஸ்லாமிய சமுதாயத்தினரை பற்றி, மாணவிகள் அறிந்து கொள்ள மட்டுமல்லாமல், அந்த சமுதாயத்தின் மீதான மதிப்பையும், அவர்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

"ஒரு இஸ்லாமிய மாணவராக, பள்ளியிலும், சமூகத்திலும், ஏன் அமெரிக்காவில் இருப்பதே கடினமான ஒன்றாகி விட்டது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற செயல்கள், மாணவர்களின் மத்தியில் சமத்துவத்தை வளர்த்து, அடுத்த தலைமுறையை மதவெறியற்ற சமூகமாக உருவாக்கும் என்ற நம்பிக்கையை சிகாகோ சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.

-ஜெ.விக்னேஷ்
(மாணவ பத்திகையாளர்)                                          

எடிட்டர் சாய்ஸ்

MUST READ