Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரவு பணியாற்றுபவர்கள் அதிக வாகன விபத்துகளை ஏற்படுத்துவார்கள்: ஆய்வில் திடுக் தகவல்!

வாஷிங்டன்: பகல் நேரங்களில் பணியாற்றுபவர்களைவிட, இரவு நேரங்களில் பணியாற்றிவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிக விபத்துகளை ஏற்படுத்துவார்கள் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் 'பிரகம் அண்டு உமன்ஸ் ஹாஸ்பிடல்' மேற்கொண்ட ஆய்வு குறித்து பி.என்.ஏ.எஸ். அறிவியல் இதழில், ''ஆய்வின் முதல் கட்டமாக, இரவு நேரங்களில் பணியாற்றும் 16 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் இரவுப் பணியாற்றிய பிறகு, சராசரியாக ஏழரை மணி நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கார் பந்தய மைதானத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு அவர்கள் கார்களை ஓட்டிச் சென்றனர்.

அடுத்த கட்டமாக, அதே நபர்கள் பகல் நேரப் பணிக்கு அனுப்பப்பட்டு, இரவு நேரத்தில் ஏழரை மணி நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, முன்பைப் போலவே மீண்டும் 2 மணி நேரம் கார்களை ஓட்டச் செய்து அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த இரண்டு ஆய்வுக் கட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, பகல் நேரம் பணியாற்றிய பிறகு அவர்கள் சிறப்பாக வாகனம் ஓட்டியதும், மோதலை ஏற்படுத்தக்கூடிய தவறுகளைச் செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

அதே நேரம், இரவு நேரப் பணிக்குப் பிறகு போதிய அளவு தூங்கியிருந்தாலும், வாகனம் ஓட்டும்போது அவர்கள் ஏராளமான குளறுபடிகள் செய்ததும், விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய தவறுகளை அதிக அளவில் செய்ததும் தெரிய வந்தது. மேலும், வாகனம் ஓட்டும்போது அவர்களது கண்களில் தூக்கத்துக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதன்மூலம், இரவு நேரப் பணியாற்றுபவர்கள் சாலை விபத்துகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close