Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 லட்சம் தமிழர்களுக்கு வீடு கட்ட நிலம்: சிறிசேனா அறிவிப்பு!

கொழும்பு: இலங்கை முகாம்களில் வசிக்கும் 1 லட்சம் தமிழர்களுக்கு வீடு கட்டுவதற்காக நிலம் வழங்கப்படும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போர் முடிந்து 6 வருடங்கள் முடிந்து விட்டாலும், அங்கும் இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் அவருக்கு, பெரும்பான்மை சிங்கள மக்களும், சிறுபான்மையின தமிழர்களும், முஸ்லிம்களும் ஆதரவு அளித்தனர்.

சிறிசேனா பதவி ஏற்றவுடனே, தமிழ் மக்களிடம் இருந்து ராணுவம் அபகரித்த நிலங்கள் அனைத்தும் அவர்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கு பகுதிக்கு கடந்த மாதம் சிறிசேனா சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''யாழ்ப்பாணம் வடக்கு பகுதியில் உள்ள முகாம்களில் 1,300 குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக வசிக்கின்றனர். அதை ஏற்க முடியாது. இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணப்படும்.

இதற்காக, முகாம்களில் தங்கி இருக்கும் ஒரு லட்சம் பேருக்கு வீடு கட்டுவதற்காக, 6 மாதத்துக்குள் நிலம் வழங்கப்படும். இதன் முதல் கட்டமாக இந்த மாத (ஜனவரி) இறுதிக்குள் 700 ஏக்கர் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன். இது கடினமான பணிதான் என்றாலும், அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்