Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணுகுண்டு வெடிக்கிறார்... உலகை மிரட்டுகிறார்... இந்த தீராத விளையாட்டுப்பிள்ளை!

ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை நேற்று டகொரியா வெடித்து  பரிசோதித்துள்ளது. வெடிக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு, 5.1 ரிக்டர் பூகம்ப அளவுகோலுக்கு நிகரானது. இந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்தவுடன், ''2016-ம் ஆண்டை ஹைட்ரஜன் வெடிகுண்டு சத்தத்துடன் கொண்டாடியதாக'' வடகொரிய அதிபர், கிம் ஜாங் வுன் உற்சாகமாக கொக்கரிக்கிறார்.

இதுவரை தென்கொரியாவுக்கு மட்டுமே அச்சுறுத்தலாக இருந்து வந்த வடகொரியா, கிம் ஜாங் பதவிக்கு வந்த பிறகு, உலகுக்கே அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பது மட்டும் தற்போது நிஜமாகியுள்ளது. எப்படி ஐ.எஸ். உலகை மிரட்டி வருகிறதோ.... அதே போலவே வருங்காலத்தில் வடகொரியாவும் உலகுக்கே அச்சுறுத்துலாக உருவாகக் கூடும். கடந்த 2006 முதல் 2009 ம் ஆண்டு வரை,  3 முறை வடகொரியா அணுகுண்டு பரிசோதனை நடத்தியுள்ளது. ஆனால் தற்போது நடத்தியுள்ள ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை உலகையே மிரள வைத்துள்ளது.

உலக நாடுகள் எத்தனை கண்டனம் தெரிவித்தாலும் அதற்காக வடகொரியாவின் ஒரே சுப்ரீம் லீடரான கிம் ஜாங் அசரப் போவதில்லை. குடும்ப ஆட்சியே பாரம்பரியமாக தொடரும் வட கொரிய மக்களுக்கு கிம்தான் கடவுள். அந்த கடவுள் விளையாட்டுப் பிள்ளையாக இருப்பதுதான் ஏழ்மையில் தவிக்கும்  வட கொரிய மக்களுக்கு கிடைத்த சாபக் கேடு.

உலகில் ஜெனரல் அந்தஸ்துடன் அதிபர் பதவியில் இருக்கும் ஒரே அதிபர் கிம் ஜாங் வுன்தான். வடகொரிய ராணுவத்தில் 'டாய்ஜிங்' அதாவது அமெரிக்க ராணுவத்தில் 'ஜெனரல் 'அந்தஸ்துக்கு இணையான ராணுவ பதவி கொண்ட தலைவர் கிம்.

ஆனால் இவருக்கு மிலிட்டரி பயிற்சி உண்டா ? என்றால் அதற்கு பதில் ஜீரோதான். ஒருநாள் கூட கிம் ராணுவ பயிற்சி எடுத்தது இல்லை. ராணுவம் குறித்து வேறு எந்த அறிவோ... ஆயுதங்கள் குறித்த எந்த ஞானமோ இவரிடம் கிடையாது.

உலகின் 4வது மிகப் பெரிய ராணுவம் கொண்ட வடகொரியாவிடம் தற்போது 11 லட்சத்து 90 ஆயிரம் தரைப்படையினர் உள்ளனர். 6 லட்சம் ரிசர்வ் படையினரும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒருநாள் கூட ராணுவ பயிற்சியில் ஈடுபடாத கிம் ஜாங்தான் தலைவர்.

கிம் ஜாங் பதவியேற்றவுடன் செய்த முதல் விஷயம் என்ன தெரியுமா? தனது தந்தை ஆட்சி காலத்தில்,  வடகொரிய அரசில் 2வது அதிகார மையமாக செயல்பட்ட தனது சித்தப்பா ஜாங் சாங் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தி, மரண தண்டனை வழங்கியதுதான். 

தற்போது 32 வயதே நிரம்பிய கிம்  ஜாங்  வுன்னுக்கு பிடித்த மது பானம் பிரெஞ்சு தயாரிப்பான காக்னாக்தான். ஆண்டுக்கு 7 லட்சத்து 63 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இந்த மதுபானத்தை  இறக்குமதி செய்து குடிக்கிறார் மனிதர்.

வடகொரிய மக்கள் மிகவும் நேசித்த தலைவர் கிம்மின் தாத்தாவும் முன்னாள் அதிபருமான கிம் சங்கைதான். எனவே அவரை போலவே வடகொரிய மக்களிடம் தோற்றமளிக்க வேண்டுமென்பதற்காக கிம் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும்  சொல்லப்படுகிறது.

வடகொரியாவுடன் நேசம் பாராட்டும் சீனா, கிம்மின் தந்தை இரண்டாவது கிம் ஜாங் திடீரென மறைந்த பிறகு, கிம் ஜாங் வுன்னை சுப்ரீம் லீடராக்க எல்லாவிதத்திலும் துணை நின்றது. தென் கொரியாவும், அமெரிக்காவும் அரசியல் அனுபவம் இல்லாத கிம்முக்கு எதிராக செயல்பட்ட போது, சீனா மட்டும் கிம் ஜாங் வுன், ''ஆட்சி செய்யவே பிறந்தவர். அவருக்கு எந்த அரசியல் அறிவும் தேவையில்லை" என்று கிம்முக்கு வக்காலத்து வாங்கியது. சீன மீடியாக்களோ ஒரு படி மேலே போய், 'கவர்ச்சியான உலகத் தலைவர் உருவாகி விட்டார் ' என 30 வயதான கிம் ஜாங் வுன் புகழ் பாடிக் கொண்டிருந்தன.

கிம்முக்கு விளையாட்டு ஆர்வமும் உண்டு. கூடைப்பந்தாட்டம் என்றால் உயிர். மைக்கேல் ஜோர்டான் பிடித்த வீரர். மைக்கேல் ஜோர்டான் ஓவியத்தை வரைந்து அவருக்கு பரிசாகவும் கிம் வழங்கியுள்ளார்.

வடகொரியாவில் கிம் பதவிக்கு வந்த பின், பெண்களுக்கு ஆடைகள் விஷயத்தில்  சில சலுகைகள் வழங்கியுள்ளார். அதுபோல் குழந்தைகளின் சொர்க்கபுரியாக வடகொரியாவை மாற்றப் போகிறேன் என்று வாக்களித்த அவர் பர்கர், பிரெஞ்ச் ஃபிரை, பிட்சா போன்றவற்றுக்கும் கடைகள் திறக்க அனுமதியளித்தார். நீண்ட காலமாக இவற்றுக்கு வடகொரியாவில் தடை இருந்தது.

பதவிக்கு வந்ததும் இன்னொரு காரியமும் செய்தார் கிம்,  அது என்ன தெரியுமா? தனது முன்னாள் காதலிக்கு மரண தண்டனை அளித்ததுதான்.

மொத்தத்தில் இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை ஆயிரம் ஐ.எஸ்.ஐ.எஸ்.  இயக்கங்களுக்கு  நிகரானவர்! 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ