Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீத்தேன் வாயு கசிவு எதிரொலி: கலிபோர்னியாவில் எமர்ஜென்சி அமலானது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
 
கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்’ (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச்  செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள  கிணற்றில் இருந்து கேஸ் கசிவது,   கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று  கலிஃபோர்னியா காற்று வள வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போதும் மணிக்கு 30 ஆயிரம் முதல் 58 ஆயிரம் கிலோ வரை நிறை கொண்ட நச்சு  மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து உயிரிழப்பைத் தடுக்கும் பொருட்டு,  போர்டர் ராஞ்ச் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தற்போது பாதுகாப்பான வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீத்தேன் வாயு கசிவை தொடர்ந்து குமட்டலும், மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படுவதாக அவர்கள் புகார் கூறியதை அடுத்து, கடந்த திங்கள் அன்று அப்பகுதி மக்களை கலிஃபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  போர்டர் ராஞ்ச் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக கவர்னர் பிரவுன் நேற்று (புதன்) அறிவித்தார். மேலும் அனைத்து அரசு   அதிகாரிகள்,  இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சோகால்கேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் லாய்ட், கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கசிவை அடைத்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நச்சு மீத்தேனின் கசிவை அடைக்கும் பணி நிறைவடைய,  மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் கணக்கிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close