Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரவு பணியில் அம்மா... மாரடைப்பில் துடித்த அப்பா... துணிச்சலில் 5 வயது மகன்... அடுத்தடுத்து நிகழ்ந்த அதிசயம்

நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய தந்தையை காப்பாற்ற, அவரது 5 வயது மகன் செய்த துணிச்சல் மிக்க செயல் பிரான்சில் நடந்துள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள மியான்மி (Mayenne) என்ற நகரில், 58 வயதான கெவின் டிஜென், தனது மனைவி, 5 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் வசித்து வருகிறார். மனைவிக்கு இரவு பணி என்பதால் அலுவலகத்துக்கு சென்று விட்டார்.
 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் கெவினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 5 வயது மகன் செய்வ தறியாமல் திகைத்து நின்றுள்ளான். இருப்பினும் துணிச்சலை வரவழைத்துக்கொண்ட அந்த சிறுவன், வெளியே வந்து தனது குட்டி சைக்கிளை எடுத்துக்கொண்டு அம்மாவை அழைத்து வர அலுவலகத்துக்கு புறப்பட்டுள்ளான். சாலையில் அதிவேகமாக வந்த அந்த சிறுவனை ஒரு ஓட்டுனர் திடீரென வழிமறித்து ‘எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறாய்?’ என கேட்டுள்ளார். அச்சத்தில் இருந்த அந்த சிறுவன் ‘எனது தந்தை இறந்து விட்டார். அம்மாவை அழைத்து வர செல்கிறேன்’ என அழுதவாறு கூறியுள்ளான்.

சிறுவனின் பேச்சில் குழப்பமும் அச்சமும் இருப்பதை அறிந்த அந்த ஓட்டுனர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 30 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, சுயநினைவு இன்றி மயத்தில் கிடந்த கெவினுக்கு உயிர் இருந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்ததும், மருத்துவர்கள் அவசர சிகிச்சை மூலம் தந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இந்த தகவல் அறிந்து சிறுவனின் தாயாரும் மருத்துவமனை வந்துள்ளார். அடுத்தநாள் பூரண நலமடைந்த கெவினை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கெவினின் மனைவி கூறுகையில், "நள்ளிரவு நேரத்தில் எனது மகன் மட்டும் தனியாக போராடியதை கண்டு வருத்தமாக உள்ளது. ஆனால், அந்த ஓட்டுனர் சரியான நேரத்தில் காவல்துறையினரை தொடர்புகொண்டதால் எனது கணவரின் உயிரை காப்பாற்ற முடிந்துள்ளது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேசமயம், தந்தையை காப்பாற்ற தனது மகன் செய்த துணிச்சலான காரியம் எனக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ