Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னேற்றத்தின் அடையாள சின்னங்களை தீவிரவாதிகள் இலக்காக கொண்டுள்ளனர்: பாகிஸ்தான்

பெஷாவர்: முன்னேற்றத்தின் அடையாள சின்னங்களை தீவிரவாதிகள் இலக்காக கொண்டுள்ளனர் என்று பாகிஸ்தான் முப்படை மக்கள் தொடர்பு துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் பஜ்வா தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானில் சார்சத்தா நகரில் உள்ள பாச்சா கான் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 4 கையெறி குண்டுகள், ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த தாக்குதலுக்கு, உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் முப்படை மக்கள் தொடர்பு துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் பஜ்வா இந்த தாக்குதல் தொடர்பாக கூறும்போது, ''தீவிரவாதிகள் முன்னேற்றத்தின் அடையாள சின்னங்களை (கல்வி நிறுவனங்களை) இலக்காக கொண்டுள்ளனர். முகம் தெரியாத தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் சண்டையிட்டு வருகிறோம்.

பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடந்தபோது 4 தீவிரவாதிகளும் உயிருடன் இருந்தனர். அவர்கள் அங்குள்ள விடுதியில் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். இறுதியில் கூரையிலும், படிக்கட்டிலும் வைத்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான வெடிபொருட்கள் வைத்திருந்தனர்.

அவர்கள் யார், யாருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான உளவுத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களுக்கு ஆதரவு அளித்தது யார் என்பவை உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்பட்டு விட்டன. இந்த தகவல்கள் அதிமுக்கியமானவை. இப்போது வெளியிடப்பட மாட்டாது. பின்னர் வெளியிடுவோம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ