Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அநியாயத்துக்கு நல்லவங்க': கூகுள பாராட்டுறதா... அத வாங்குனவர பாராட்டுறதா?

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள  மந்த்வி பகுதியைச் சேர்ந்த சான்மே வேத் என்ற மாணவர்,  தற்போது அமெரிக்காவில் எம்பிஏ படித்து வருகிறார். ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் சான்மே வேத்துக்கு உண்டு.

சும்மா இருக்கும் போது இணைய முகவரிகளை தனது பெயரில் வாங்கி வைப்பது வேத்தின் பொழுது போக்குகளில் ஒன்று.  கடந்த செப்டம்பர் மாதம் கூகுள் டொமைனில், புதியதாக இணைய முகவரிகள் கிடைக்கிறதா? என சான்மே வேத் தேடியுள்ளார். அப்போது கூகுள். காம் முகவரியே விற்பனைக்குள்ளது என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனை வாங்க விருப்பம் தெரிவித்து,  அடுத்த நிமிடமே கிரெடிட் கார்டில் பணத்தை செலுத்தினார்.  கூகுள். காம் முகவரி சான்மே வேத்துக்கு சொந்தமாகி விட்டது. 

ஆனால் ஒரு நிமிடம்தான் அவரால் கூகுள்.காம் இணையதள உரிமையாளராக இருக்க முடிந்தது. அடுத்த நிமிடமே கூகுள் டொமைன்ஸ் ஒரு தகவல் அனுப்பியது. அதில்,  சான்மே வேத் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், அவர் வாங்கிய முகவரி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்  சொல்லப்பட்டது.

எனினும் கூகுள் .காமை வாங்கியது குறித்த அனுபவத்தை வேத்,  தனது  லிங்குடு.இன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது  கூகுள் முகவரியை புதுப்பிக்கத் தவறியிருக்கலாம். இதனால்தான்  நான் பணம் செலுத்தியதும் எனது பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே கூகுள். காமுக்கு ஒரு நிமிட உரிமையாளராக இருந்த சான்மே வேத்தை கவுரவிக்க,  கூகுள் நிறுவனம் முடிவு செய்து, அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் பரிசாக அளிப்பதாக தெரிவித்தது.

அவர் அந்த பணத்தை இந்தியாவில் இலவசமாக பள்ளிகளை நடத்தி வரும் 'ஆர்ட் ஆப் லிவிங் இந்தியா 'அறக்கட்டளைக்கு வழங்குவதாக அறிவித்து விட, வேத்தின்  பெருந்தன்மைக்காக பரிசுத் தொகையை 8 லட்சமாக உயர்த்தி அறிவிப்பதாக கூகுள் அறிவித்தது.

ஆனாலும் அசராத சான்மே வேத்,  ரூ.8 லட்சத்தையும் 'ஆர்ட் ஆப் லிவிங் இந்தியா அறக்கட்டளை'க்கு வழங்கி விட்டார். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 400க்கு மேற்பட்ட இலவச பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில் 39 ஆயிரத்து 200 குழந்தைகள் படித்து வருகின்றனர். 

இது குறித்து வேத் கூறுகையில், ''பணத்தை தேடி ஓடுபவர்களுக்கு மத்தியில் நான் இப்படிதான் இருக்க விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.




 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ