Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர்ப்பை மீறி ராக்கெட் ஏவியது வடகொரியா: உலக நாடுகள் எச்சரிக்கை!

சியோல்: சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ராக்கெட் ஏவி உள்ளது. இதற்கு, கடும் விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும் என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வடகொரியா 2006–ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுவரை 3 முறை அந்த நாடு அணுகுண்டு சோதனைகளையும், பல முறை அணு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது.

ஆனாலும், அதிக சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடந்த மாதம் 6-ம் தேதி புங்க்யே ரி நகரில் உள்ள அணு ஆயுத சோதனைத்தளத்தில் அந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஐ.நா.வின் தீர்மானத்தையும் மீறி வடகொரியா தற்போது ராக்கெட் ஏவி உள்ளது. ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதற்கு வடகொரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தநிலையில் வடகொரியாவின் தற்போதைய நடவடிக்கையானது உலக நாடுகளின் கோபத்தை மேலும் அதிகரித்து உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் திறன்கொண்ட வடகொரியாவின் இந்த ராக்கெட், தேவையான சமயத்தில் ஏவுகணையாக மாற்றி பயன்படுத்தும் வகையில் வடகொரியா வடிவமைத்து உள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என்று சர்வதேச நாடுகள் கருதும் நிலையில், இது அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள் திட்டம் என்று வடகொரியா தெரிவித்து உள்ளது. வடகொரியா, ராக்கெட் ஏவியதற்கு ஜப்பான், அமெரிக்கா, மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும், கடும் விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும் என்றும் அந்த நாடுகள் எச்சரித்து உள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ