Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொந்த நிலத்தில் கவுரவமாக வாழ விரும்புகிறோம்: இலங்கை தமிழர்கள் கண்ணீர்!

கொழும்பு: சொந்த நிலத்தில் கவுரவமாக வாழவே விரும்புகிறோம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையரிடம் இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போரில் சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டித்ததோடு, போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட சர்வதேச நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இதனை ஏற்க இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையராக நியமிக்கப்பட்ட சையத் அல் ஹுசைன் முதல் முறையாக இலங்கை சென்றுள்ளார். அங்கு 4 நாட்கள் தங்கி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அவர், நேற்று தமிழர் பகுதியான வடக்கு மாகாண தலைநகர் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட தமிழர்கள் தங்களின் நிலங்களை பறித்துக்கொண்டு அதில் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் அமைக்க இலங்கை அரசு திட்டமிடுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இழந்த நிலங்களை மீட்டுத் தர வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையரிடம் உருக்கமாக வேண்டுகோள்விடுத்த தமிழர்கள், தங்களுக்கு விமான நிலையமும், துறைமுகமும் வேண்டாம் சொந்த நிலத்தில் கவுரவமாக வாழவே விரும்புகிறோம் என்று கண்ணீர் மல்க பெண்கள் தெரிவித்தனர். மேலும், இறுதிக்கட்டபோரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஐ.நா.மனித உரிமை ஆணையரைச் சந்தித்து தங்கள் வேதனைகளை எடுத்துரைத்தனர்.

அதன்பின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், கவர்னர் பளிஹகக்கார ஆகியோரை ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹுசைன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆணையருடனான சந்திப்பு குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் கூறும்போது, ''அரசியல் கைதிகள் விஷயத்தில் பொதுமன்னிப்பைவிட வழக்கு விசாரணையை சரியான முறையில் நடத்தி அவர்களை விடுதலை செய்வது தான் சரியானதாக அமையும். அரசுக்கு அரசியல் கைதிகள் தொடர்பான விஷயங்களை கூறி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையரை கேட்டுக் கொண்டேன்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ