Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்!

நியூயார்க்: வடகொரியா அதிநவீன ஏவுகணையை செலுத்தியதாக கூறி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2006–ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது வடகொரியா. இதுவரை 3 முறை அந்த நாடு அணுகுண்டு சோதனைகளையும், பல முறை அணு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது.

ஆனாலும், அதிக சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடந்த மாதம் 6-ம் தேதி புங்க்யே ரி நகரில் உள்ள அணு ஆயுத சோதனைத்தளத்தில் அந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஐ.நா.வின் தீர்மானத்தையும் மீறி வடகொரியா சில நாட்களுக்கு முன் ராக்கெட் ஏவி உள்ளது. ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதற்கு வடகொரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தநிலையில் வடகொரியாவின் தற்போதைய நடவடிக்கையானது உலக நாடுகளின் கோபத்தை மேலும் அதிகரித்து உள்ளது.

நீண்ட தூரம் பயணிக்கும் திறன்கொண்ட வடகொரியாவின் இந்த ராக்கெட், தேவையான சமயத்தில் ஏவுகணையாக மாற்றி பயன்படுத்தும் வகையில் வடகொரியா வடிவமைத்து உள்ளது என்று அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

வடகொரியாவின் இந்த சோதனையால் அண்டை நாடான தென்கொரியாவில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதையடுத்து ‘தாட்’ என்னும் அதிநவீன ஏவுகணையை தென்கொரிய கடல் பகுதியில் நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவும், தென்கொரியாவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. இதேபோல், எத்தகைய தடைகளை வடகொரியா மீது விதிப்பது என சீனாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்நிலையில், வடகொரியா அதிநவீன ஏவுகணையை பரிசோதித்து பார்த்தாக கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அவசர கூட்டத்தை கூடியது. அந்த கூட்டத்தில், பியோங்யாங் (வடகொரியா) ஐ.நா. தீர்மானத்தை அத்துமீறும் விதமாக இந்த சோதனையை நடத்தி இருக்கிறது. எனவே இதற்கான தக்க நடவடிக்கையை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறுகையில், வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை அதிக பட்ச தடைகளை விதிக்கும் என்று கருதுகிறோம். இவை முன்பு விதிக்கப்பட்டதைவிட இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

அதே நேரம், தாங்கள் விண்ணில் செலுத்தியது ஏவுகணை அல்ல, ராக்கெட்தான் என்று வடகொரியா மீண்டும் மறுத்துள்ளது. “நாங்கள் செலுத்திய ராக்கெட்டில் இருந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு அது பூமியை சுற்றி வருகிறது’’ என்று வடகொரியா தெரிவித்து உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ