Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்: களைகட்டும் அதிபர் தேர்தல்!

ந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன்.

உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில்தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கவின் நாசா

நம்ம ஊர் நாஞ்சில் சம்பத் மாதிரிதான் இந்த ட்ரம்பும். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசி சர்ச்சைகளைக் கிளப்பி விடுவார். “மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிகப்பெரிய சுவர் எழுப்புவேன். ஏனெனில், மெக்சிகோதான் அமெரிக்காவிற்கு பலாத்காரம் செய்பவர்களை அனுப்புகிறது” என்று மெக்சிகோவைச் சாடினார். ஒருமுறை “இஸ்லாமியர்களை நாட்டை விட்டே வெளியேற்றுவேன்” என்று சொல்ல, இளசுகளெல்லாம் இவருக்கெதிராய் கிளம்பினார்கள். பலமுறை அதிபர் ஒபாமா, உள்துறை செயலர் ஜான் கெர்ரி, ஹிலாரி கிளிண்டன் ஆகியோரையும் போட்டுத்தாக்கினார். இதனால் பலரும் இவரை வெறுக்க, கடந்த மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பின்தங்கினார் ட்ரம்ப.

வாய் திறந்த ஒபாமா

என்னதான் ட்ரம்ப் பேசிக்கொண்டே போனாலும், அதைப்பற்றி அதிகம் பேசவில்லை அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்பு, முதன்முதலில் ட்ரம்ப் பற்றிப் பேசிய ஒபாமா, அவரை வறுத்தெடுத்தார். “எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக ட்ரம்ப் அதிபராக மாட்டார். அமெரிக்க அதிபர் பொறுப்பு என்பது, ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுப்பது போன்றதல்ல. மார்க்கெட்டிங் செய்வதைப்போல் எளிமையானதல்ல. அது மிகவும் சீரியசான வேலை. அமெரிக்க மக்கள் மிகவும் சென்சிட்டிவானவர்கள். அவர்கள் நிச்சயம் ட்ரம்பை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று பொளந்து கட்டினார்.

“நான் இன்று நிற்கும் இடத்தில் நிற்கப்போகிறவர் அமெரிக்காவிற்கு மட்டும் பொறுப்பானவர் அல்ல. அமெரிக்காவை நம்பியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் அவரே பொறுப்பாவார். பல தேசங்களின் தலைவர்களோடு இனைந்து பணியாற்றும் மனோநிலை இருக்க வேண்டும்” என்று கூறினார் ஒபாமா. இதுவரை எந்தப் போட்டியாளர் பற்றியும் வாய் திறக்காத ஒபாமா, முதல் முதலில் ட்ரம்ப் குறித்து பேசியது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

ட்ரம்ப் பதிலடி

ஒபாமாவின் இந்த வார்த்தைத் தாக்குதலுக்குப் பதிலளித்த ட்ரம்ப், “அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்னைப் பற்றிக் கூறியிருப்பது வேடிக்கையளிக்கிறது” என்றார் ட்ரம்ப். கடந்த முறை ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னிக்கு பதில், தான் தேர்தலில் நின்றிருந்தால் ஒபாமா இரண்டாவது முறை அதிபராயிருக்க மாட்டார் என்றும் கூறினார். “ரோம்னியை ஆதரித்தேன். அதற்கு முன் அவரோட போட்டியிட்ட மெக்கெயினையும் ஆதரித்தேன். இருவருமே தோற்றுவிட்டனர். அதனால், இம்முறை ஜனநாயகக் கட்சியைத் தோற்கடிக்க நானே களம் காணப்போகிறேன்” என்று ஆக்ரோஷமானார். ஒபாமா அதிபரான பின்னர்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துவிட்டதாக ட்ரம்ப் சுட்டிக் காட்டினார். “நம் நாட்டின் பட்ஜெட்டைப் பாருங்கள். கஜானாவைப் பாருங்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கூட நம்மை விட செழிப்பாக இருக்கும்” என்று கொந்தளித்தார் ட்ரம்ப்.

இதுவரை டீசன்டாக சென்று கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பிரசாரம், இவர்கள் இருவரும் வார்த்தைகளில் போரிட்டுக்கொள்ள மீடியாவிற்கு தீனியாகிக் கொண்டிருக்கிறது. எப்படியும் ட்ரம்பின் வாய் சும்மா இருக்காது என்பதால், இன்னும் இத்தேர்தல் பிரசாரத்தில் பல களேபரங்களை எதிர்பார்க்கலாம். ஒபாமாவின் நம்பிக்கை உண்மையாகுமா. இல்லை ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் குடியேறுவாரா? நவம்பர்-8 நமக்கு பதில் சொல்லும்.

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close