Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானுக்கு எப் 16 போர் விமானம்: விழுந்தது முட்டுக்கட்டை!

பாகிஸ்தானுக்கு எப்.16 ரக போர் விமானங்களை வழங்க, அமெரிக்காவின்  குடியரசு கட்சி செனட்டர் ரேன்ட் பால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற கீழ் சபையில், கூட்டு மசோதா ஒன்றை அவர் கொண்டு வர இருக்கிறார்.

அமெரிக்கா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கடந்த 2012-ம்  ஆண்டு 13  எப்-16 ரக போர் விமானங்களை முற்றிலும் இலவசமாகவே வழங்கியது. பின்னர் 2013-ம் ஆண்டு ஜோர்டன் பயன்படுத்தி வந்த 13 எப்-16 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு முதல் அந்த போர் விமானங்கள் ஒவ்வொன்றாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்தான் தற்போது அமெரிக்கா மேலும் 8  எப் -16 பிளாக் சி/டி ரக போர் விமானங்களை வழங்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இந்த ரக விமானங்கள் எல்லாவிதமான போர் விமானங்களையும் விட  நவீனத்துவமாக மேம்படுத்தப்பட்டவை. எல்லாவிதமான கால நிலையிலும் இயங்கக் கூடியது.  மத்திய ரக 'மல்டி ரோல் கொம்பத் ' ரக விமானம் இது .

இதற்கிடையே  பாகிஸ்தானுக்கு எப் -16 ரக போர் விமானங்களை வழங்க குடியரசு கட்சியின் செனட்டர் ரேன்ட் பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசு கட்சியின் மற்றொரு செனட்டர் தானா ரோக்ரபாச்சருடன் சேர்ந்து அவர் கூட்டு மசோதாவை அமெரிக்க கீழ் சபையில் கொண்டு வர இருக்கின்றார்.

இது குறித்து ரோக்ராபச்சார் கூறுகையில், '' பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி தனது சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தும். குறிப்பாக பலுசிஸ்தானில் வசிக்கும் மக்களை குறிவைத்து தாக்கும்.கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இரட்டை கோபுரத் தாக்குதலில் 3 ஆயிரம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவர் பின் லேடன்.

ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடிக்க சி.ஐ.ஏவுக்கு உதவியாக இருந்த சாகில் அப்ரிடி என்ற மருத்துவரை அமெரிக்கர்கள் இன்னும் மறந்து  விடவில்லை. ஆனால் பாகிஸ்தான் அரசு அவரை பிடித்து ஜெயிலில் அடைத்து வைத்திருக்கிறது. சாகில் அப்ரிடியின் கைது நிச்சயமாக அமெரிக்க அரசுக்கு விரோதமானது. இதனால் பாகிஸ்தானுக்கு எப் 16 போர் விமானம் மட்டுமல்ல, எந்த விதமான ஆயுத உதவியும் செய்யக் கூடாது. பாகிஸ்தானை ஒரு எதிரி நாடாக கருத வேண்டும். நட்பு நாடாக பார்க்க வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ