Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்ஸா... நோவா?: சுவிஸ் நாட்டில் ஈழ தமிழர்களுக்கு ஒரு அக்னி பரீட்சை!

னைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம்,  ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது,  "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட அகதிகள் மறுவாழ்வு, குழந்தைகள் நலம் என ஐக்கிய நாடுகளின் சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள்,  முக்கிய அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து.

80 லட்சம் பேர்தான் மக்கள் தொகை என்றாலும் மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொருளாதார பலம் என பல்வேறு சிறப்பு தன்மைகளில் உலகின் ஒரு உதாரண நாடு அது. ஆனால் ஹிட்லரே விட்டு வைத்த அந்த நாட்டை, அதன் மனிதாபிமானத்தை அசைக்க தொடங்கி  இருக்கிறது பல்வேறு நாடுகளில் வசித்து வந்தவர்களை அகதிகளாக்கி கொண்டு இருக்கும் மறைமுக ஆயுத விற்பனைகளும் அதன் விளைவான பயங்கரவாதமும், போர்களும்.

சமாதானத்தை விதைக்க வேண்டிய பூமியில் சண்டைகளை விதைத்துக் கொண்டு அகதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து  கொண்டு இருக்கிறார்கள் உலகின் மறைமுக முதலாளிகள். அதன் விளைவுகள்,  இப்போது சமாதான பூமியான சுவிஸ்சில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.

இப்படிதான் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள்.

சுவிஸ் நாட்டில் 20 லட்சம் பேர் வெளிநாட்டினர். இதில் பல லட்சம் பேர் அந்நாட்டின் குடியுரிமை பெறாத அகதிகள். அதில் ஈழத்தமிழர்கள் மட்டும்  60 ஆயிரம் பேர். இதில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அந்நாட்டின் குடியுரிமை  பெற்றவர்கள்.  சுற்றி  உள்ள நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்கள் காரணமாக அகதிகள் உருவாகி வருகின்றனர். அவர்கள் ஐரோப்பாவை நோக்கியே தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரவேண்டிய நிலைக்கு அந்நாடுகள் ஆளாக்கப்படுகின்றன. அவ்வாறு அடைக்கலம் தேடுவோர்கள் பலர்,  கடல் பயணத்தில் உயிர் இழப்பதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடிகிறது.

இவ்வாறு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் தற்போது ஜெர்மன் முதலிடம் வகிக்கிறது. பிற நாடுகளும் அடைக்கலம் கொடுக்க தொடங்கி இருக்கின்றன. எப்போதுமே நிம்மதியாக பலர் வாழும் ஒரு ஊரில்,  பிழைப்பு தேடி வருகின்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அந்த ஊர் மக்கள் அவர்களை மதிப்பார்கள். இந்த உளவியலை மிகச் சரியாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறது சுவிஸ் நாட்டின் ஆளும்கட்சி.

அந்நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருக்கும் குடியுரிமை பெறாத வெளிநாட்டினர்,  சிறு குற்றங்கள் புரிந்தாலும் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற ஒரு பொது வாக்கெடுப்புக்கு தற்போது அந்நாட்டின் ஆளும்கட்சி ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த வாக்கெடுப்பு பிப்ரவரி 28 ல் நடை பெறுகிறது. நல்லதுதானே என்று எண்ணலாம். சிறு குற்றங்கள் வரிசையில் எதுவெல்லாம் வருகிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கும்.

முன்னதாக அந்த நாட்டின் குற்ற பட்டியலின் ஒரு உதாரணம்...

போக்குவரத்து விதிகளின்படி' 60 கிலோ மீட்டர் வேகம்' என்று ஒரு சாலையில் போடப்பட்டு இருக்குமேயானால், அதில் தப்பித் தவறி 65 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டினால் குற்றம், அதற்கு அபராதம். மக்கும் குப்பை மக்காத குப்பை என்பதை மாற்றி போட்டால் குற்றம், அதற்கும் அபராதம். வீட்டில் நீங்கள் சற்று உரக்க பேசி அதிக ஒலியை உண்டாக்கி,  அது பக்கத்துக்கு வீட்டுக்காரரின் தனிமைக்கு, சுதந்திரத்துக்கு இடர் ஏற்படுத்தினால் அதுவும் குற்றம், அதற்கும் அபராதம் உண்டு. குழந்தையை தப்பி தவறி திட்டியோ,  அடித்தோ விட்டால் அதுவும் குற்றம், அதற்கும் அபராதம் உண்டு....

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு குற்றம் செய்பவர்கள் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்றால் அவர்கள் தண்டனையை ஏற்று அபராதமோ, சிறையோ, உரிமம் ரத்தோ பெற்று அரசின் உதவியோடு அங்கு வாழலாம். ஆனால் குடியுரிமை பெறாதவர்கள் இப்படி ஏதாவது தவறு செய்தால் அவர்கள் நாடு  கடத்தப்படவேண்டும். இதுதான் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் பொது வாக்கெடுப்பின் அம்சம்.

இப்படி ஆண்டுக்கு 10 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்த வாக்கெடுப்பு வலியுறுத்துகிறது. இந்த வாக்கெடுப்பு அநீதி என்கிறார் சுவிஸ் நாட்டின் ஓல்டேன் மாநகராட்சி  உறுப்பினரும், வெளிநாட்டவர் உறவுகளின் பிரதிநிதியுமான தமிழர்,  ஸ்ரீ ராசமாணிக்கம். அவரிடம் பேசினோம்.

" 30 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கு வசிக்கிறோம். இந்த தேசம் மனிதாபிமான தேசம். இங்கே அகதிகளை சமமாக மதிக்கிறார்கள் மக்கள். ஆனால் இப்படி ஒரு பொது வாக்கெடுப்பை  நடத்துவதன் மூலமாக ஒவ்வொரு அகதியும் சிறைக்குள் இருப்பது போலவே அஞ்சி, நடுங்கி வாழ வேண்டிய  சூழல் இருக்கும். ஈழ தமிழ் அகதிகளை பற்றி மட்டுமே நான் பேசவில்லை. அவ்வாறு குடியுரிமை பெறாமல் இருப்பதில்  அவர்களின் எண்ணிக்கை வெறும் 35 ஆயிரம் பேர்தான். ஆனால் நான் குறிப்பிட்டதைப்போல 30 நாடுகளை சேர்ந்த பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இந்த பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் பாதிக்கப்படுவார்கள்.

எனவே ஒவ்வொருவரும் இந்த பொது வாக்கெடுப்பில் " நோ " என்று வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆனால் எனது கவலை எல்லாம் இதுதான்... வாக்களிக்கும் உரிமை பெற்ற, குடியுரிமை பெற்ற 25 ஆயிரம் ஈழத் தமிழர்களில்,  நாட்டின் பொதுத் தேர்தலின்போதே வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே வாக்களித்தார்கள். அதாவது, ஒரு வேற்று நாட்டில், தஞ்சம் புகுந்த நாட்டில், சொந்த நாட்டில் அடையாளம் இழந்த தமிழ் மக்களுக்கு இன்னொரு நாட்டில் வாக்களிக்கும் உரிமை கொடுத்தும்கூட,  அவர்களில்   25 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேர்தான் வாக்களித்தார்கள். இது அவர்களின் தமிழ் சொந்தமான மீதமுள்ள குடியுரிமை பெறாத 35 ஆயிரம் பேரையும் பாதிக்கும். இந்த பிப்ரவரி 28 வாக்கெடுப்பில் எத்தனை பேர் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை எண்ணும்போது கவலையாக இருக்கிறது " என்றார்.

சுவிஸ் நாட்டில் இது போன்றதொரு பொது வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால் அது சட்டமாகிவிடும். ஆனால், சுவிஸ் நாட்டின் பெரும்பான்மை மண்ணின் மைந்தர்கள் இந்த வாக்கெடுப்பில் "நோ" என்றுதான் வாக்களிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- விஷ்வா விஸ்வநாத்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ