Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு டிவி நிகழ்ச்சி... ஒரே இரவில் 'ஜோக்கர்' ஆன 'டொனால்ட் ட்ரம்ப்’!

ரசியல் - உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான்.

ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையானத் தொண்டனுக்கு ஆட்சியிலோ, பதவி நாற்காலியிலோ பொதுவாக ஆசை இருப்பதில்லை; அந்தத் தொண்டன் மனதை ஆக்ரமித்திருக்கின்ற பொதுநலம், கொள்கைப் பிடிப்பு என்பதையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்பிட்டக் கட்சி நம்மை ஆட்சி செய்தால் நல்லது என்கிற மனோபாவம்தான் அவனைப் பம்பரமாகச் சுழல வைக்கிறது.

அத்தகைய மனோபாவம், ஒரு சாதாரணக் குடிமகனிடம் தோன்றியுள்ளது என்பது வெறும் இயற்கையான நிகழ்வு அல்ல. அதன் பின்புலத்தில் ஒரு பெரிய அரசியல் சிலந்தி வலையே பின்னப்பட்டிருக்கிறது என்பதுதான் அப்பாவி வாக்காளர்களின் அறிதலிலிருந்து மறைக்கப்பட்ட உண்மை.


போத்தீஸ் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், ”மக்களின் அபிமானம்” என்பது தானாக உருவாகும் ஒரு வஸ்து அல்ல; அது நம்மையே அறியாமல் நம் உளவியலில் படிந்துவிடுகிற பல்வேறு காரணிகள் சேர்ந்து உருவாக்கித் தருகிற ரசாயனமே ஆகும்.  அத்தகையக் காரணிகளை எந்த அளவில், எந்த நேரத்தில், யாருக்கு, எப்படித் தயாரித்தளிப்பது என்பதே அரசியல் சூட்சுமம். 

அத்தகைய சூட்சுமத்திற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுதான், அண்மையில் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘Last week tonight with John Oliver’ நிகழ்ச்சி.  தமிழகத்தைப் பொறுத்தவரை குடியரசு முறை சார் அரசியலில், மக்களிடமிருந்து அபிமானத்தை அறுவடை செய்யும் முயற்சி 60களில் தொடங்கியது எனலாம். நகைச்சுவை என்பது வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட காலம் அது. அதனால் அனல்பறக்கும் மேடைப் பேச்சுக்கள், ஆவேசம் சிந்தும் எழுத்துக்கள் ஆகியவை எங்கு மிளிர்ந்ததோ அந்த இயக்கங்களிடம் மக்கள் அபிமானம் இருந்தது. அதையடுத்து தமிழகத்தில் தலைதூக்கியது திரைப்பட மோகம். சினிமா என்ற சொல் நம் அரசியல் பொதுவாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை இங்கு எழுதவேண்டிய அவசியமில்லை.

அதுபோல மேற்கத்திய நாகரீகத்தில், சமூக வலைதளங்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்ட பின் இன்று மக்கள் அபிமானத்தைப் பெரிதும் கவர்ந்திருப்பது நகைச்சுவை. ஒரு குறிப்பிட்ட மனிதரையோ / சாராரையோ, குறிவைத்து, மூன்றாம் தரமாகச் சாடி, அதிலிருந்து ஏற்படுத்தப்படுகிற நகைச்சுவையை மக்கள்,  ‘மீம்ஸ்’களின் மூலமாகவும், ’ஹேஷ்டேக்’களின் மூலமாகவும் ரசிக்கின்றனர். மேலும் இந்த ’மீம்ஸ்’கள் ஒரு ’ஜோம்பி வைரஸை’ப் போன்றவை. ஏன்? எதற்கு? என்று சிந்திக்காமலேயே, நகைச்சுவையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, போதை ஊசியைப் போல் தானும் ஏற்றிக்கொண்டு, அடுத்தவர் மீதும் குத்திவிடுகிற, மன மயக்கத்தை இந்த நகைச்சுவை அளிக்கிறது.

இத்தகைய வெகுஜன நகைச்சுவையைக் கொண்டு எப்படி அரசியலில் அபிமானத்தை உருவாக்கவும், உருக்குலைக்கச் செய்யவும் முடியும் என்பதன் வெளிப்படுதான் ஜான் ஆலிவர் குழுவின் சாகசம். ஒரு கேமரா, ஒரு தொகுப்பாளர், கொஞ்சம் பின்புலத்தகவல்கள் - இதுதான் இந்த நிகழ்ச்சியின் மூலதனம். ஆனால் அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொதுவுலக வாழ்வியலாளர்களின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்தை இந்த நிகழ்ச்சி பாதித்திருக்கும் விதம் நம்மால் எண்ணிப்பார்க்க முடியாத அளவு இருக்கிறது.

 

கொச்சைத் தமிழில் சொல்லப்போனால், ’கட்டம் கட்டி’ - ஒருவரைக் காலி செய்ய வேண்டும் என்றால் அதற்கு சரியான ஆள் ஜான் ஆலிவர்தான். அமெரிக்கக் குடியரசின் கட்சியின் சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் பதவிக்காக போட்டியிட்டுக் கொண்டிருக்கும் ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்பவரை ஒரே இரவில் ‘ஜோக்கராக’ மாற்றியிருக்கிறது இந்த நிகழ்ச்சி.

ஒருவரது நடை, உடை, பாவனையிலுள்ள சின்ன சின்ன குறைபாடுகளைக்கூட நகைச்சுவையையும், யதார்த்தத்தையும் சரியான அளவில் கலந்து சொல்லுவோமேயானால் அது அபிமானத்தைப் புரட்டிப்போட வல்ல ஆயுதமாகிவிடும் என்பதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் ஆலிவர்.

டொனாலட் ட்ரம்ப், கடனில் மூழ்கியிருந்த காலத்தில், ’ஒரு பிச்சைக்காரன் கூடத் என்னை விட 8 பில்லியன் டாலர்கள் அதிகமாக வைத்திருக்கிறான், ஏனெனில் அவ்வளவு கடன் எனக்கிருக்கிறது’ என்று தன் மகளிடம் வருத்தப்பட்டிருக்கிறார். இந்த சோகமானச் செய்தியைக் கூட நகைச்சுவைச் சாயம் பூசி, ‘தன் ஏழ்மையான நிலையிலும், ஒரு பிச்சைக்காரனிடம் போய் கீழ்மையாக நடந்துகொள்ள, ’ட்ரம்ப்’ஆல் தான் முடியும்’ என்று நெத்தியடி அடித்தார் ஆலிவர்.

ட்ரம்ப்-இன் சமூக  வலைதளப் பதிவுகள், அவர் மகனின் பேட்டி எனத் தோண்டியெடுத்து அவரது பிம்பத்தையே மாற்றிய ஆலிவர், இறுதியில் பிரயோகித்ததுதான் பிரம்மாஸ்திரம். டொனால்ட் ட்ரம்ப் பரம்பரையின் குடும்பப் பெயர், TRUMP அல்ல, சில தலைமுறைகளுக்கு முன்னால் அது DRUMPF என்று கண்டுபிடித்துப் போட்டுடுடைத்தார்.

#MakeAmericaGreatAgain என்ற ட்ரம்ப் இன் வாசகத்தைக் கேலி செய்வது போல், #MakeDonaladDrumpfAgain என்று ஒரு ஹேஷ்டேக் கை வெளியிட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

இதுவரை யூ-ட்யூப்பில் மட்டும் இந்நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர்  பார்த்திருக்கிறார்கள் என்றால் இதன் தாக்கத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

மக்கள் அபிமானத்தை ஆட்கொள்ள அமெரிக்க அரசியலின் சூட்சுமம் இது. தமிழகத்தில்...?

-  ச.அருண்
(மாணவப் பத்திரிகையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close