Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கியூபா மக்களை நேரடியாக சந்தித்து பேச காத்து இருக்கிறேன்: ஒபாமா ட்வீட்!

ஹவானா: கியூபா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, 'கியூபா வந்து சேர்ந்தேன். கியூபா நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்' என்று ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவி வந்தது.

இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையையும் எடுத்தார். அதன் தொடர்ச்சியாக 54 ஆண்டுகள் கழித்து,  அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோல் கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3 நாட்கள் பயணமாக மார்ச் 20-ம் தேதி கியூபா தலைநகர் ஹவானா செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்தது.


இந்நிலையில், தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் ஒபாமா இன்று கியூபா வந்தடைந்தார். தலைநகர் ஹவானாவில் அமெரிக்க அதிபரின் சிறப்பு விமான வந்திறங்கியபோது, விமான நிலையத்தில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஒபாமாவை கியூபா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் புருமோ ரோட்ரிகுவெஸ் மற்றும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

பின்னர், தனது பிரத்யேக காரில் ஏறிய ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஹவானா நகர சாலை வழியாக சென்றபோது, மழைக்கு இடையிலும் ஒபாமாவை வரவேற்கும் வகையில், அமெரிக்கா-கியூபா கொடிகளுடன் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஒபாமாவின் வருகையையொட்டி நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க எதிர்ப்பாளர்கள் பலரை போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

ஒபாமா செல்லும் பாதையில் உள்ள கட்டிடங்களில் உள்ள கடைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கட்டிடங்களின் மொட்டைமாடிகளில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த கால்வின் கூலிட்ஜ் என்பவர் கடந்த 1928-ம் ஆண்டு கடைசியாக கியூபாவுக்கு சென்றார். அவரது வருகைக்கு பின்னர் கடந்த 88 ஆண்டுகளுக்கு கழித்து ஒபாமா இங்கு வந்துள்ளதால் இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கியூபாவில் புதிதாக திறக்கப்பட்ட புதிய அமெரிக்க தூதரகத்தை ஒபாமா பார்வையிட்டார். அங்குள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்டோரவை சந்தித்து பேச உள்ளார். அதேவேளையில், ஃபெடல் காஸ்ட்ரோவை ஒபாமா  சந்தித்து பேச மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், ஒபாமாவின் இந்தப் பயணத்தால் இருநாடுகளுக்கிடையில் நிலவிவரும் நெடுங்காலப்பகை முடிவுக்கு வரும். அதற்கேற்ப, கியூபா-அமெரிக்கா இடையிலான பல்தரப்பு உறவுகளை புதுப்பித்து, பலப்படுத்தும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை இந்த சுற்றுப்பயணத்தின்போது ஒபாமா வெளியிடுவார் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று கியூபா சென்று சேர்ந்ததும், அந்நாட்டு மொழியில் அதிபர் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில், ''கியூபா வந்து சேர்ந்தேன். கியூபா நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ