Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை: மோடி

பிரசல்ஸ்: எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு போரிட வேண்டும் என்று பிரசல்சில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சுக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். பிரசல்ஸ் நகருக்கு நேற்று போய் சேர்ந்த பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்திய மேல்பீக் சுரங்க ரயில் நிலையத்துக்கு சென்ற மோடி, அங்கு தீவிரவாத தாக்குதல்களில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேசன் உள்ளிட்டவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பிரதமர் மோடி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிச்சேலை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து மோடிக்கு பெல்ஜியம் பிரதமர் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது, ''பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பெல்ஜியம் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா துறைமுக துறையை பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறது. உள்நாட்டு நீர் போக்குவரத்து வழிகள், பெல்ஜியம் தொழில் அதிபர்களுக்கு வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது.

பிரதமர் மிச்சேலுடனான பேச்சுவார்த்தை பயனுள்ள விதத்தில் அமைந்தது. அறிவியல், தொழில்நுட்பம் தொடங்கி வர்த்தகம் வரை இரு நாடுகளும் இணைந்து நிறைய செய்ய முடியும். நாம் இன்றைக்கு ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கிற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. சந்தையாக மட்டுமல்ல. மிகப்பெரிய திறன் மையமாகவும்தான். இந்தியாவும், பெல்ஜியமும் ரத்த உறவினை கொண்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் இங்கு வந்து போரிட்டனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் வீர மரணம் அடைந்தனர்.

தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு நின்று போரிட வேண்டும். இதில் இந்தியா 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. தீவிரவாதத்தை எதிர்த்து எல்லா நாடுகளும் போரிட வேண்டும். தீவிரவாதம் தனிப்பட்ட நாடுகளுக்கு ஏற்பட்ட சவால் இல்லை, மனித குலத்திற்கே விடுக்கப்பட்ட சவால்.

மனித நேயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை" என்றார்.

பெல்ஜியம் உதவியுடன் இந்தியாவின் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகே நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை பிரதமர் மோடியும், பெல்ஜியம் பிரதமர் மிச்சேலும் இணைந்து ‘ரிமோட்’ மூலம் இயக்கி தொடங்கி வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close