Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமானக் கடத்தல்: உயிர் பயத்தில் மனைவியிடம் 'உண்மை'யை சொன்ன பயணி!

டந்த மாதம், 29-ம் தேதி எகிப்து நாட்டை சேர்ந்த 'எகிப்து ஏர்' என்ற பயணிகள் விமானம்,  அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின.


இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை பத்திரிகை ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கடத்தலின்போது நிகழ்ந்தவை, இப்போது கேட்க சுவாரஸ்யமாவே இருக்கின்றன. அவை, அவர் மொழியிலேயே...

‘பேசறதுக்கு நேரமில்லை’

”டேக் ஆஃப் ஆகி 15 நிமிஷம் கழிச்சு, விமானப் பணிக்குழுவினர் எல்லாரோட பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கச் சொன்னாங்க. ‘பேசறதுக்கு நேரமில்லை. சீக்கிரம் குடுங்க’ இதான் அவங்க சொன்னது. நான்கூட யாரோட பாஸ்போர்ட்டோ தொலைஞ்சுடுச்சு, அதான் கேட்கறாங்கன்னு நெனைச்சேன்.

பணிகுழுவைச் சேர்ந்த ஒரு சிலர் ஏதோ பேசிக்கிட்டிருந்தாங்க. எனக்கு குழப்பமாகி, ‘என்ன ஆச்சு.. என்ன நடக்குது?’ன்னு கேட்டேன். அவங்க, ‘அதோ அங்க பின்னால நிக்கற ஆளு பெல்ட்ல பாம் வெச்சிருக்கான்னு சொல்றான். எப்ப வேணா விமானத்தை வெடிச்சுத் தகர்த்துடுவேன்னு சொல்லிட்டிருக்கான்’ன்னாங்க.

பதட்டமானாலும், கெய்ரோ போனா எல்லாம் சரியாப்போகும்னு நெனைச்சுகிட்டேன். ஆனா, எனக்கு முன்னால இருந்த மேப்பைப் பார்த்தா, சுத்திலும் கடல்தான். கடலைத் தவிர எதுவுமே தெரியல. நட்டநடுக் கடலுக்கு மேல பறந்துட்டிருக்குன்னு தெரிஞ்சது.

அப்பதான் எனக்கு பதட்டம் அதிகமாச்சு. சினிமால நடக்கறமாதிரி, வெடிச்சு சிதறப்போறோம்னு நெனைச்சுகிட்டேன். அடுத்த அரைமணி நேரத்துல விமானத்துல இருக்கற எல்லாருக்கும் தகவல் தெரிஞ்சுடுச்சு.

ஒரு பயணி அந்தக் கடத்தல்காரன்கிட்ட பேசப் போறதுக்காக எந்திரிச்சார். போய் பெல்ட்ல பாம் இருக்கான்னு பார்க்கப்போறேன்னு சொன்னார். உண்மையாவே பாம் இருந்தா, எல்லாரும் காலின்னு போகல.

கடத்தல்காரன் ஆக்ரோஷமாவெல்லாம் இல்ல. பின்னால நின்னு சிகரெட் குடிச்சிட்டிருந்தான். ஒரு பணிப்பெண், அவன் தனக்கு என்னென்ன தேவைன்னு லெட்டர் குடுத்திருக்கறதா சொன்னாங்க.
நான், நாம சாகப்போறது உறுதின்னு நினைச்சுக்கிட்டேன். நண்பர்கள், குடும்பம் அவங்ககூட இருந்த இனிமையான நிகழ்வுகள்லாம் மனசுல வந்து வந்து போச்சு. அப்பாம்மா எப்படி எடுத்துப்பாங்கன்னெல்லாம் நினைச்சுக்கிட்டேன். 


பாம் கொண்டு போகலாம்... சிக்கன் கொண்டு போகக்கூடாதா?

விமானம் சைப்ரஸை நெருங்கினதும், பயணிகள் அவங்க மொபைல்ல நெட்வொர்க் வருதுன்னு நோட் பண்ணினாங்க.

உடனே, தரையிறங்கறதுக்கு முந்தியே ஒரு பயணி,  எல்லா நம்பருக்கும் கூப்பிட்டு சத்தமா கத்த ஆரம்பிச்சுட்டார். ‘கடத்திட்டாங்க.. கடத்திட்டாங்க’ன்னு ஃபோன்ல புலம்பறார். நான், ‘நீ இப்டி கத்தி கடத்தல்காரன் கோவிச்சுக்கப் போறான்’ன்னு சொல்லியும் அவர் கேட்கல.

வேறொரு பயணி, அவரோட மனைவியைக் கூப்பிட்டு, ‘உனக்கு தெரியாம ஒரு சீக்ரெட் அக்கவுண்ட் வெச்சிருக்கேன். அதுல இவ்ளோ இவ்ளோ பணம் இருக்கு’ன்னெல்லாம் சொல்லிட்டிருந்தார். அவரோட மனைவியும் விடாம, ஃபோன்ல எல்லா தகவல்களையும் கேட்டு கேட்டு வாங்கிட்டிருந்தாங்க.

எனக்குப் பின்னால ஒருத்தர், நல்லா தூங்கிட்டிருந்தார். நான் எழுப்பி, ‘சைப்ரஸ்ல தரையிறங்கிடுச்சு’ன்னேன். அவர் ‘சைப்ரஸ்ல எதுக்கு? நான் போகவேண்டிய இடத்துக்குப் போகணும்’னார்.
“யோவ்... ஹைஜாக் பண்ணிருக்காங்க’ன்னேன்.

‘தெரியுமே.. நான் பாஸ்போர்ட்டைக் குடுத்ததுமே தூங்கிட்டேன்’ங்கறார். ‘டென்ஷனா இல்லையா?’ன்னா, ‘நான் எங்க அப்பாக்கு மெசேஜ் அனுப்பிச்சுட்டேன். அவர் ஐபாட்ல இந்த ஃப்ளைட்டை டிராக் பண்ணிட்டிருப்பார்’னு சொன்னார் கூலா.

தரையிறங்கி, குழந்தைகள், பெண்கள்லாம் போலாம்னதும்,  ஒரு தம்பதிகளா வந்திருந்தவங்களோட மனைவிகள் சத்தமா அழ ஆரம்பிச்சுட்டாங்க,  ‘தனியா போகமாட்டோம்’னு. அப்புறம், 'எகிப்தியர்களெல்லாம் போலாம்'னான் கடத்தல்காரன். பாஸ்போர்ட் கைல கெடச்சதும் ஒரு பெரியவர், நம்ப முடியாம ‘ஓ’ன்னு அழ ஆரம்பிச்சுட்டார்.

எல்லாரும் விடுவிக்கப்பட்டதும், ஏர்போர்ட்லேயே ரொம்ப நேரம் இருந்தோம். செய்திகள்ல ‘ சக பயணி இப்ராஹிம் சமஹா’ங்கறவர் கடத்தினார்’னு தகவல்கள் தப்பா பரவிடுச்சு. அந்த இப்ராஹிமோட மனைவி அவரைக் கூப்பிட்டு,  ‘எதுக்குய்யா கடத்தின?’ன்னு கேட்டுட்டிருந்தாங்க. அவர் பாவம்,  ‘நான் இல்லம்மா’ன்னு விளக்கம் கொடுத்துட்டிருந்தார்.

திரும்ப எங்களுக்கு எகிப்து போகறதுக்காக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. போறப்ப, ஒருத்தர் சிக்கன் வாங்கி வெச்சிருந்தார். விமான நிலைய செக்யூரிட்டி, அதை அனுமதிக்க முடியாதுன்னுட்டார்.
’அப்படின்னா, பெல்ட்ல பாம் கொண்டு போகலாம்.. சிக்கன் கொண்டு போகக்கூடாதா’ன்னு ரொம்ப நேரம் வாக்குவாதம் பண்ணி, கடைசில ஃப்ளைட் ஃப்ரிட்ஜ்ல வெச்சு, தரையிறங்கப்ப எடுத்துக்கச் சொன்னாங்க.

இப்ப ஜாலியா பேசிக்கறோம். தமாஷ் பண்ணிக்கறோம். ஆனா அந்த நிமிடங்கள் அவ்ளோ பதட்டமாவும், பயத்தோடவும்தான் போச்சு”  என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி... மனைவியிடம் அந்த சீக்ரெட் அக்கவுண்ட் குட்டை உடைத்த பயணியின் கதிதான் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. அதையும் முடிந்தால் விசாரிச்சு எழுதுங்க ஆஸ்மாவி! 

-சத்ரியன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close