Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேரி கால்வின்: இலங்கை இனப்படுகொலையின் முக்கிய சாட்சி!

வள் அவளது கட்டளைகளில் மிகத் தெளிவானவள். அவள் மிகவும் தைரியமானவள். அவள் அனுப்பப்பட்ட இடங்களில் எல்லாம், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய செய்தியினை ஊருக்கு அறிவிக்கவே விரும்பினாள்.அவளது ஒரே நோக்கமும் அதுதான். அவளுக்கு தெரியும் இது அத்தனை எளிதான விடயம் இல்லை என்று. தன்னுடைய உயிரையே கொடுத்தவள் அவள். அவள் ஒரு சரித்திரம்;  அவள் ஒரு பத்திரிக்கையாளர்;  அவள் ஒரு யுத்த களச் செய்தியாளர். அவள்தான் மேரி கால்வின்.

அமெரிக்காவில் ஆசிரியர் தம்பதிக்கு மகளாக பிறந்து, இங்கிலாந்து பத்திரிக்கைக்காக பல்வேறு போர் களத்தில் நின்று செய்திகளை வெளியிட்டவர். போரின் உண்மை தன்மையினை அம்பலப்படுத்தியவர்.  அவரது ஐம்பத்து ஆறாவது வயதிலே கொல்லப்பட்டார். செசன்யா, கொசோவோ, சிஎர்ரா லியோன், ஜிம்பாப்வே, கிழக்கு திம்மர் மற்றும் ஈழம் என்று பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து,  செய்திகளை வெளியிட்டவர். சிரியாவில் நடந்த போரினைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தபோது 2012 ல் கொல்லப்பட்டார். அவருக்கு தெரியும் இது நடக்கும் என்று.

சிரியா போரை,  மக்களுக்கு எதிராக நடத்திக் கொண்டு இருந்த அதிபர் அல்-அஸ்சாத் இன் படைகளுக்கு, பத்திரிகையாளர்களை கொல்ல உத்தரவிடப்பட்டிருந்தது அவளுக்கு தெரியும். “நரகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் மேரி” என்ற உள்ளூரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர், மேரி அங்கு கொல்லப்படப்போகிறார்  என்று தெரிந்தும் கூட சொல்லி இருக்கலாம். அந்த வார்த்தை எத்தனை ஆழமானது என்று மேரிக்கும் தெரியும்.

“நான் ஹோம்ஸ்க்கு அருகில் உள்ள பாபா அமர் பகுதிக்கு திரும்பி வந்துவிட்டேன். நான் இப்போது ஜன்னல்களே இல்லாத ஒரு எளிய குடிசையில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். இன்று நான் ஒரு ஆறடி சுவரின் மீது ஏற வேண்டியது இருந்தது. எனக்கு ஒருவர் உதவி செய்தார். ஆனால், நான் நினைத்ததை விட நான் அதிக எடை இருக்கிறேன். அவர் தூக்கி விடும்போது, தரையில் எனது தலை மோதியது. இங்கு ஒவ்வொரு நாளும் கொடூரமாக நகர்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டும் இங்கிருந்து விட்டு கிளம்பி விடுகிறேன்” இது மேரி அவரது நண்பருக்கு அனுப்பிய மின்னஞ்சல்.
ஆனாலும், அவர் அங்கு நடப்பவற்றை உலகிற்கு சொல்ல நினைத்தார். உலகின் ஒவ்வொரு யுத்தத்தைப் பற்றியும் செய்தி சேகரிக்க செல்லும் போது அவர் உச்சரிக்கும் வார்த்தை,  “இந்த உலகம் ஏன் இங்கு இல்லை?” என்பது. ஆம், இந்த உலகின் ஒரு குறிப்பிட்ட மூலை உல்லாசமாக இருக்க, இன்னொரு மூலை நரகமாக இருப்பதை வெளிப்படுத்த விரும்பினார் அவர்.

“என்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பும் இதனை செய்யாதே என்று சொல்கிறது” என்று என்று மேரியிடம் அவரது புகைப்பட கலைஞர் கான்ராய் கூற, அந்தச் சூழல் அவ்வளவு இருக்கமானதாக இருந்தது எனில், அதே அளவு உறுதியுடன், “அது உங்களுடைய அக்கறை. நான் என்ன ஆனாலும், சென்றுதான் தீர வேண்டும். நான் ஒரு செய்தியாளர். நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர். நீங்கள் வேண்டுமானால் இங்கு இருக்கலாம்” என்று சிரியாவில் இருக்கும் போது மீண்டும் ஹோம்ஸ் பகுதிக்கு செல்வது பற்றி நடந்த உரையாடலில் பதில் அளித்தார்.

“சிரிய படையினர் மருந்துகளோ, உணவோ,  மின்சாரமோ இல்லாத அப்பாவி மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்ற உண்மையை வெளியிட்ட அடுத்த நாள்,  அவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படும் நாளுக்கு முந்தைய நாளில் பல்வேறு சர்வதேச ஊடகங்களிலும் தோன்றி,  அங்கு நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்தினர்.

“இங்கு ஒரு இரண்டு வயது சிறுவன் இறப்பதை  பார்க்க நேர்ந்தது. அவனது மார்பில் உலோகம் பாய்ந்து இருந்தது. என்னால் எதுவும் செய்ய முடியாது. அவனது சிறிய வயிறு, அவன் இறக்கும் வரை துடித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகவும் கொடூரம்” என்று சர்வதேச ஊடகங்களில் அவரது குரல் ஒலித்த அடுத்த நாள் அவர் இறந்தார். உண்மையில் இது ஒரு விபத்து என்று சிரியா அரசு கூறினாலும், இது விபத்து இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஏதேனும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டால் அவர் தவறுதலாக/ விபத்தாக இறந்ததாக சொல்லச் சொல்லி சிரிய ராணுவத்திற்கு கட்டளையிடப்பட்டு இருந்தது.

மேரி கால்வின் என்றுமே உயிருக்கு பயந்ததாக தெரியவில்லை. அவர் இதே நிலையைத்தான் லிபியாவிலும் எதிர் கொண்டார். உணவு இல்லாமல், போர்த்த துணி  இல்லாமல் குளிரிலே உறைந்து கிடந்த அனுபவங்கள் அவருக்கு உண்டு. போர் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருந்த சூழலிலே,  போர் தொடங்கிய பின் முதன் முதலில் சர்வதேச ஊடகத்திற்காக கடாஃபியின் பேட்டியை எடுத்தவர் அவர். மேரி கால்வினின் முக்கியமான அடையாளம், அவரது ஒற்றை கண்ணில் அவர் அணிந்திருந்த கருப்பு ஒட்டு. அதுவே அவரது தைரியத்தின் அடையாளம்.

அந்த அடையாளம் ஈழ இனப்படுகொலையின் முக்கிய சாட்சி. ஆம், சிங்கள ராணுவம் தமிழ் மக்களை கொன்றொழிப்பதை பற்றிய செய்தி சேகரிக்க சென்ற போது ஏற்பட்ட காயம் அது. ஈழப் போர் உச்சத்தில் இருந்த போது வன்னியில் முப்பது மைல் தூரம் நடந்தே சென்று செய்தி சேகரித்தார். தமிழ் மக்கள் போரினால் அடையும் துன்பத்தையும், அவர்களுக்கு போரின் போது செல்ல வேண்டிய எந்த மருந்தோ, உணவோ மறுக்கப்பட்டிருப்பதைப் பற்றி அம்பலப்படுத்தினார். சிங்கள ராணுவத்தின் சர்வதேச போர் விதி மீறல்களைப் பற்றி செய்தி சேகரித்தார். ஆறு வருடங்களாக பத்திரிக்கையாளர்கள் அங்கு நடக்கும் போரினைப் பற்றிய உண்மைச் செய்தியினை வெளியிட தடுக்கப்பட்டு இருப்பதைப் பற்றி செய்தி சேகரித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, அவர் “பத்திரிக்கையாளர்... பத்திரிகையாளர்” என்று கத்திய பின்பும் அவர் மீது சுழல் ஏவுகணை எறிகுண்டை வீசியது சிங்கள ராணுவம். அதில்தான் அவரது இடது கண் பார்வை பறி போனது. மேரியின் மீது தாக்குதல் நடந்து சில நாட்களுக்குப் பின், சிங்கள அரசின் தகவல் அமைச்சர் ஆரிய ரூபசிங்கே,  “நாங்கள் பத்திரிக்கையாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுமதிக்கிறோம். ஆனால், அவர்கள் உயிருக்கு அவர்களே பொறுப்பு” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையிலே பேட்டி அளித்தார்.

இந்த நிகழ்வின் பின் Post-traumatic stress disorder என்ற ஒரு கடுமையான மன அழுத்த நோயினால் மேரி பாதிக்கப்பட்டார். Post-traumatic stress disorder என்பது ஒரு மிகக் கொடூரமான சூழலில் இருந்த பின்பு/ அனுபவித்ததால் வருவது. இதனால், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தின் படுகொலைகளை கண்ட, இனப்படுகொலையின் முக்கிய சாட்சிகளில் ஒருவர்தான் மேரி கால்வின். அவர் இன்று இருந்திருந்தால், இன்னும் எக்கசக்கமான போர் காலத்தில் நடந்த உண்மைகள், சிங்கள ராணுவத்தின் கொடூர முகம், வெளி வந்து இருக்கும்.

மக்களின் பக்கம் நின்று உயிரை துச்சமென மதித்து இவ்வளவு பெரிய அரசுகளை எதிர்த்து செய்திகளை வெளியிட்ட மேரி கால்வின், அவர் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு பிறகும் தொடர்ந்து போர்ச் செய்திகளை வெளியிட்டார். சிங்கள ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலால் இடது கண்ணை இழந்த மேரி கால்வின் இடது கண்ணில் ஒரு ஒட்டினை அணிந்தார். அதுவே அவரது அடையாளமாகிப் போனது.

ஆம், இன்று இதே நாளில் தான் மேரி கால்வின் மீது சிங்கள ராணுவம் ஏவுகணை வீசியது! பத்திரிகை துறை வரலாற்றின் மிக முக்கியமான பத்திரிக்கையாளரின் மிக முக்கியமான நாள் இன்று!

-ரமணி மோகனகிருஷ்ணன்(மாணவப்பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close