Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படிப்புக்காக பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை தள்ளும் நாடு..!

சியெரா லியோன் – ஒரு பாவப்பட்ட ஆப்பிரிக்க தேசம். ஆப்பிரிக்க தேசங்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடான பசி, பஞ்சம், நோய்களால் அவதிப்படும் ஒரு தேசம். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், அந்நாட்டிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளின் தாய்மார்கள் 15 முதல் 17 வயது சிறுமிகள் என்பதுதான். கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும், அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாததால், படிப்புக்காக பணம் சம்பாதிக்க படுக்கையறைக்கு விரட்டப்படுகிறார்கள் அந்நாட்டுச் சிறுமிகள்.

ஒரு வருடக் கல்விக் கட்டணம் 40 பவுண்டுகள். அதைக் கட்ட வழியில்லாமல், பெற்றோரின் அரவணைப்பும் இல்லாமல், கல்வி கற்றே ஆக வேண்டும் என்ற வேட்கையில் வேறு வழியின்றி, இந்தக் கொடுமைகளுக்கு இசைந்து கொடுக்கின்றனர் அந்நாட்டுச் சிறுமிகள். இப்படி மதில்மேல் பூனையாக நிற்கும் சிறுமிகளை பாலியல் தொழிலுக்குள் தள்ளி பணம் பார்க்கும் கூட்டம் நாடெங்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கொடிய எபோலா நோய் தாக்கப்பட்ட பிறகு, நிலமை மிகவும் கவலைக்கிடமாகி விட்டது. குடும்பங்கள் இருக்கும்போதே கைவிரிக்கப்பட்ட அச்சிறுமிகள், அந்த நோய் தாக்குதலுக்குப் பிறகு குடும்பத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.

ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ள மூன்று பவுண்டுகள். ஒரு இரவுக்கு மூன்று ஆண்கள் வரை உறவு வைத்துக்கொள்கின்றனர் அச்சிறுமிகள். இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும், அச்சிறிய வயதில் அவர்கள் எப்படித்தான் உயிர்வாழ்கிறார்கள் என்று ஆச்சர்யப்படுகின்றனர் அந்நாட்டுப் பெண்கள். எல்லாம் கல்வி கற்க வேண்டும் என்ற வெறிதான். கல்விக்காக இந்த கொடுமைகளை அவர்கள் சகித்துக்கொண்டபோதிலும், துன்பம் அவர்களை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. விதியின் விளையாட்டால், பாதுகாப்பெல்லாம் பாழாகி வயிற்றில் பிள்ளையை சுமந்து நிற்கிறார்கள் பருவம் தாண்டா அந்த பிஞ்சுகள். விளைவு – கருத்தரித்த பெண்களை பள்ளிகளிலிருந்து வெளியேற்ற சட்டம் நிறைவேற்றியது அந்நாட்டு அரசு. எதற்காக தங்கள் வாழ்வை விட்டுக்கொடுத்தார்களோ, அந்தக் கல்வியும் தற்போது கிடைக்காமல் போய்விட்டது.16 வயது சிறுமி மேரி, தனது ஒரு வயது மகனுடன் சுற்றித்திரிகிறாள். வழக்குரைஞர் ஆக வேண்டும் என்ற கனவோடு கல்வி கற்கச் சென்றவள், இன்று கனவுகள் எல்லாம் பாழாகி தனிமரமாய்த் தவிக்கிறாள். தனக்கும் தன் தங்கைக்குமான கல்விக்காகச் செலவுக்காக உத்தரவாதம் அளித்து தனது இச்சையை தீர்த்துக்கொண்ட 25 வயது காமுகன் ஒருவன், அச்சிறுமி கருத்தரித்தவுடனேயே அவளது வாழ்க்கையையும் கனவையும் கலைத்துவிட்டு எங்கேயோ சென்று விட்டான். “ அவனுக்கு என்னைப் பிடித்தது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை கொடுத்தான். எனது நிலைமை மாறும் என்ற நம்பிக்கையை அவன் கொடுத்தான். கல்வி அனைவரது நிலைமையையும் மாற்றும். எனது நிலைமையும் மாற வேண்டும். பிறரைப் போல் நானும் படிக்க வேண்டும்” என்று சொல்லும் மேரியின் வார்த்தைகளில்,  அவன் விட்டுப் போனான் என்ற வருத்தத்தை விட, படிக்க வேண்டும் என்ற வேட்கை தான் தெரிகிறது.

மேரியை ஏமாற்றியவன் போல் அவ்வூரில் இன்னும் ஏராளமான பேர் சுற்றித் திரிகின்றனர். கல்விக்கு பணம் செலுத்துவதாகக் கூறி அச்சிறுமிகளை தங்கள் வலையில் விழ வைத்து பாழாக்கும் அந்த கொடியவர்கள் மீது எந்தச் சட்டமும் பாய்வதில்லை. மேரியின் அதே நிலைதான் அடாமா என்ற 16 வயதுச் சிறுமிக்கும். தன் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, தனது அத்தையோடு வாழ்ந்து வந்த அவளும் ஒரு ஆணின் விளையாட்டால் பாதிக்கப்பட்டவள்தான். “இவ்வுலகில் என் மீது அக்கறை செலுத்தியவன் அவன்தான். அவனும் என்னை விட்டுப் போனது என் உயிரைப் பறித்துவிட்டது” என்று கண்ணீர் சிந்துகிறார்.

வீதிகளில் திரியும் சிறுமிகளை பாலியல் தொழிலுக்குள் தள்ளி பணம் சம்பாதிப்பதற்கென்றே ஒரு கூட்டம் அங்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறது. அச்சிறுமிகளின் கல்வி கற்கும் வேட்கையை தங்களுக்கு சாதகமாக பேசிப் பணியவைத்து, அக்கூட்டம் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவள்தான் அமானிடா. “எனக்கு இது பிடிக்கவில்லைதான். ஆனால் படிக்க வேறு வழியில்லையே. எந்த ஆதரவும் இல்லாத நிலையில் நானேதானே எனக்கான வாழ்க்கையைத் தேடிக்கொள்ள வேண்டியுள்ளது” – இது அமானிடாவின் வேதனை.

இவர்கள் மூன்று பேர் மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ மேரிகள், எத்தனையோ அமானிடாக்கள் அந்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கர்ப்பமானவர்கள் பள்ளிகளில் படிக்கக்கூடாது என்று சட்டம் போடும் அரசாங்கம், இந்தச் சிறுமிகள் ஏன் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை எண்ணி பார்த்து, அதற்கு உதவிக்கரம் நீட்ட தவறிவிட்டது. ஏன், இச்சிறுமிகளின் இயலாமையில் குளிர்காயும் வக்கிர மனம் படைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடது? என்கின்றர் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.

இந்த  உலகம் இஸ்ரேலை மட்டும்தான் பரிதாபத்தோடு பார்க்கும். யார்தான் இவர்களைக் காப்பது? ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் எல்லாம் இப்போதுதான் இந்நாட்டின் மீது பார்வை செலுத்துவதாகத் தெரிகிறது. இந்தியாவில் கூட பொறியியல் படிப்பிற்காக நகைகளும், வீடுகளும்தான் அடமானம் வைக்கப்படுகின்றன. ஆனால் இச்சிறுமிகள் அனைத்தையும் தாண்டி கல்விக்காக நம் எவராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு செயலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் செய்த காரியம் தவறென்றாலும், அவர்களது நியாயமான வேட்கையை நிறைவேற்ற உல நாடுகள், சர்வதேச குழந்தை நல அமைப்புகள் தலையிட்டு உடனே உதவிக்கரம் நீட்டினால், தங்களுக்கான நல்ல வாழ்க்கையை அவர்களே செதுக்கிகொள்வார்கள்.

அதற்கான லட்சியத் தீ, அவர்களுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close