Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டும் இ - கழிவுகள்... அபாயத்தில் சென்னை...ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்! #WhereismyGreenWorld

-கழிவுகள் என்ற இந்த ஒற்றை வார்த்தை, மனித குலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் பெரும் அபாயமாக உருவாகி வருகிறது.

இ - கழிவுகள் ???

ஒரு மின்னணு பொருள், அதன் பயன்பாட்டு ஆயுளை கடந்த பின்னரோ, அது வேறெந்த பயன்பாட்டிற்கும் உபயோகிக்க முடியாமல் போகும்பொழுதோ அல்லது அது சரி செய்ய முடியாத பழுது நிலையை அடையும்போதோ இ- கழிவாக மாறுகிறது.

உதாரணத்திற்கு ஒரு மொபைல் போனை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் வரை அது மின்னணு உபகரணம். ஆனால், அது உடைந்து பயன்படுத்தாத நிலையை அடையும்பொழுது இ -கழிவாக மாறும்.

ஒரு நிமிடத்திற்கு உலகில் எட்டு டன் எடை அளவிற்கு ஈ கழிவுகள் உருவாவதாக இ- கழிவுகள் குறித்த ஒரு ஆய்வு, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் எதிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற, குப்பைகளை கொட்டும் நிலமாகவே உலகம் மாறிவிடும் என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.

ஆம்...நம் அன்றாட வாழ்வில் நாம் வீசி எறியும் சராசரி கழிவுகளை விட அதிகமான ஆபத்து இ- கழிவுகள் மூலமாக ஏற்படும் என்பது ஒரு அதிர்ச்சித் தகவல். இந்த வகை கழிவுகளில் அதிகப்படியாக இருக்கும் பொருள் சிலிகான். இப்பொழுது வரும் மின்னணு பொருட்கள் பலவற்றிலும் பயன்படுத்தப்படுவது செமி கண்டக்டர்களே. அதில் சிலிகான் எனும் படிமமே அதிக அளவில் இருக்கிறது. கழிவாக இதை தூக்கி எறியும் பொழுதுதான் இதன் ஆபத்துகள் முழுமையாக வெளிவருகிறது. பிளாஸ்டிக் எந்த அளவிற்கு ஆபத்தானதோ அதே அளவு ஆபத்தானது இந்த சிலிகான்.

உலக அளவில் இ- கழிவுகள்:

உலக அளவில், வளர்ந்து வரும் நாடுகளிலேயே இந்த வகை கழிவுகளால் பிரச்னைகள் எழுகின்றது. வளர்ந்த நாடுகளில் இதை மறுசுழற்சி செய்வதற்கும் பத்திரமாக அப்புறப்படுத்துவதற்கும் பல தொழில்நுட்ப முறைகளை கையாள்கிறார்கள். அங்குள்ள மக்களும் மின்னணு பொருட்களை முடிந்தவரை கழிவாகாமல் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளிலோ இதைப்பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் பலரும் சர்வ சாதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்களை குப்பைகளில் கொட்டிச் செல்கின்றனர்.

அங்குள்ள அரசாங்கங்களுக்கு இது ஒரு பெரும் செலவாகவும் சிரமமாகவும் மாறியுள்ளது. சுருங்கச் சொன்னால் சவாலாக மாறியுள்ளது. இ- கழிவுகளை ஒழுங்கான முறையில் கையாளவில்லையெனில் இது பெரும் ஆபத்தாக மாறிவிடும். உலகத்தின் இ- கழிவுக் கூடமாக சீனா மாறி வருகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள்

1. சீனாவின் அதிக மக்கள்தொகை

2. அதிகளவில் மின்னணு பொருட்கள் தயாரிப்பு

3. உலகின் பல நாடுகளிலிருந்து இ-கழிவுகளை மறுசுழற்சிக்காக சீன நிறுவனங்கள் இறக்குமதி செய்வது

இந்தியாவில் இ- கழிவுகள்

இந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்து வரும் நாடு என்பதால் இங்கும் ஈ கழிவுகளின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பிட்டு ஒரு பகுதி என்றில்லாமல் அனைத்து இடங்களிலும் ஈ கழிவுகள் பரவிக் கிடக்கின்றன. இ- கழிவுகளின் புழக்கம் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடம் வகிக்கிறது.

டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் குறைந்த அளவு வித்தியாசங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இங்கே மின்னணு சாதனங்கள் வாங்குவதற்கென்றே பிரத்யேக சந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அபாயத்தில் 'சென்னை'

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ளது "ரிச்சி ஸ்ட்ரீட்" எனும் மின்னணு சந்தை. உலக அளவில் தேடக்கூடிய பல பொருட்கள் இங்கு சர்வசாதாரணமாக கிடைக்கும். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த சிறிய இடத்தில், பெட்டிக் கடை முதல், பிரமாண்ட ஷோரூம் வரை அனைத்திலும் அனைத்து விதமான மின்னணு சாதனங்கள் குவித்து வைக்கப்படிருக்கும். இந்த இடத்தில் ஒரு கடையின் ஒரு நாள் வர்த்தகமே சில லட்சங்களை தொடும்.

ஆனால் இங்கே விற்கப்படும் பொருட்களின் பிற்காலத்திய நிலை என்ன என்பதை எவரும் சிந்திப்பதில்லை. மலிவு விலையில் கிடைக்கும் இந்த பொருட்கள் பழுதானால் சரிசெய்து பயன்படுத்த எவரும் விரும்புவதில்லை. பழுதானவுடன் அதை குப்பைகளில் விட்டெறிந்து விட்டு, புதிய சாதனத்திற்கு மாறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தூக்கி எறியப்பட்ட இந்த சாதனங்கள் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பேராபத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை சிந்திப்பது கூட இல்லை.

சென்னையை சுற்றி உள்ள சில இடங்களான தாம்பரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில், நகராட்சியின் குப்பைகளை கொட்டும் இடங்கள் உள்ளன. அங்கு சராசரியாக பாதிக்கு பாதி ஈ கழிவுகளே நிரம்பியுள்ளன என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

பெரும்பாலும் அனைத்து கனிமங்கள் மனித உடலிற்கும், சுற்றுச்சுழலுக்கும் தீங்கு விளைவிப்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

1997-2007 இடையேயான 10 ஆண்டுகளில் 500 மில்லியன் கணினிகள் கழிக்கப்பட்டுள்ளன என்கிறது அமெரிக்கா நடத்திய ஆய்வு ஒன்று. அந்த கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தை நாம் சிந்திக்க வேண்டும்.

‘லெட்’ எனும் கனிம வகைப் பொருளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உட்கொண்டால் விஷமாக மாறும் தன்மை கொண்டது. இந்த கனிமம் பல மின்னணு பொருட்களில் இருக்கிறது என்பது பேரதிர்ச்சி தரும் தகவல். இதைத்தாண்டி, மெர்குரி, கேட்மியம் போன்ற கனிமங்களும் பல மின்னணு பொருட்களில் அடங்கியிருக்கிறது. இந்த இ-கழிவுகளை பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்வது எதிர்காலத்தில் நம் ஆயுளைக் கூட்டிக்கொள்ளும் வழியாகும்.

ஈ கழிவு ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வது அவசியம்.

1. மின்னணு பொருட்களின் உபயோகத்தை குறைத்தல்.

2. பயன்படுத்திய பொருட்களை ரீ யூஸ் செய்தல்.

3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல்

இதை செய்ய முடியாத பட்சத்திலேயே கழிவுகளை அப்புறப்படுத்துதல் எனும் செயலை செய்ய வேண்டும். பொழுது போக்கிற்காகவும் வளமையை காட்டிக்கொள்வதற்காகவும் மின்னணு பொருட்களை நாம் பெருக்கிக்கொண்டே போனால்,  அப்புறப்படுத்தப்படும் கழிவுகள், தேவையின்றி பூமியை ஆக்கிரமிக்கும்.

எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ பூமியில் இடமின்றி, வெறும் குப்பைக் கூடமாகவே இந்த கோள் இருக்கும்.

- பா. அபிரக்க்ஷன்

(மாணவப் பத்திரிகையாளர்)

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close