Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏன் வாக்களிக்க வேண்டும்...? ஒபாமா சொல்லும் காரணங்கள்

மெரிக்க அதிபர் பராக் ஒபாமா கறுப்பின மாணவர்கள் நிரம்பிய ஹோவார்ட் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கமான எழுத்து வடிவம்:

சவால் மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைகிற உங்களுக்குத் தீரா வேட்கை மட்டுமில்லாமல் அதைச் செயல்படுத்த செயல்திட்டமும் இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு வேட்கையோடு செயல்திட்டம் இருக்கவேண்டும். வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது, செயல்பாடு முக்கியம். வெறும் hashtags போதாது, ஓட்டுக்கள் தேவை.

மாற்றம் ஏற்பட ரௌத்திரத்தை விட மேலான ஒன்று தேவைப்படுகிறது. அதற்கொரு திட்டம், கட்டமைப்பு தேவைப்படுகிறது. 1964-ல் ஜனநாயக மாநாட்டில் ஐந்து அடி நான்கு அங்குலம் கொண்ட பெண்மணி லோ ஹேமார் ஒரு கிளர்ச்சி ஊட்டும் பேச்சால் அசத்தினார். அதற்குப் பின் மிஸிஸிபி மாகாணத்தில் பருத்தி பொறுக்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராடினார். கூட்டத்தில் ஒருங்கிணைக்கும் கருவிகள், தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வீடு வீடாகப் போய் மக்களைத் திரட்டினார்.

தற்காலக் கறுப்பினத் தலைவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்கு உவகைத் தருகிறது. உங்களைப்போன்ற எண்ணற்ற இளைஞர்களின் செயல்பாடே பலரின் பார்வையை மாற்றியுள்ளது. உங்களின் தொடர் முயற்சியால் வெள்ளை இனத்தவர், கருப்பினத்தவர், ஜனநாயக, குடியரசு கட்சியினர் ஆகியோர் குற்றவியல் சட்ட பரிபாலனத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கவனத்தில் கொள்ள முடிந்திருக்கிறது.

அமைப்பு முறையில் மாற்றத்தைக் கொண்டு வர, விழிப்புணர்வு மட்டும் போதாது. சட்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது, நம்முடைய வழக்கமான அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. அப்பாவிகள் பலர் சிறையில் அடைக்கப்படுவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் உங்களிடம் ஒரு கேள்வி எழுப்புகிறேன். குற்றிவியல் சட்ட சீரமைப்பு மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள் ?

சிறப்பான காவல் கண்காணிப்பு தேவை என்றால் உங்கள் மாவட்ட அரசு வழக்கறிஞர் யாரென்று தெரியுமா? உங்கள் மாநில தலைமை அரசு வழக்கறிஞர் யார் எனத் தெரியுமா? யார் அவர்களை நியமனம் செய்கிறார், அவர்களுக்குள் என்ன பாகுபாடு எனத் தெரியுமா?

அவர்கள் யார், அவர்களின் பொறுப்புகள் என்னென்ன என்று கண்டறியுங்கள். உங்களுடைய மக்களை அணிதிரட்டுங்கள். அவர்களுக்கு ஒரு திட்டத்தை ஒரு கையளியுங்கள், மாற்றத்துக்கு இணைந்து செயல்படுங்கள், அவர்கள் செயல்படாமல் போனால் அவர்கள் அதற்குப் பதில் சொல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேட்கை அவசியம், அதைவிடச் செயல்திட்டம் மிக முக்கியம்.

உங்களுடைய திட்டத்தில் ஓட்டளிப்பது என்பது எப்பொழுதோ நடக்கிற ஒன்றாக இருக்கக்கூடாது. எப்பொழுதும் வாக்களிப்பதில் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும். ஓட்டளிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு ஐம்பது வருடங்கள் ஆன பின்னும் ஓட்டளிப்பதற்கு எண்ணற்ற தடைகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டளிக்காமல் தடுக்கப் புதிய தடைகளை பல சக்திகள் ஏற்படுத்துகிறார்கள். உலகின் மேம்பட்ட ஜனநாயகம் ஒன்று தன் மக்களை ஓட்டளிக்கும் வாய்ப்பை மறுப்பது என்பது இங்கு மட்டுமே நிகழ்கிறது. அதற்கொரு பூர்வகதை உண்டு.

எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டாலும் உலகிலேயே அமெரிக்காவில் மிகக்குறைந்த வாக்களிப்பு விகிதம் உள்ளது. 2014-ல் இடைப்பருவ தேர்தல்களில் குறைந்தபட்ச வாக்களிப்பு 36% மட்டுமே இருந்தது. இது இரண்டாவது மிகக்குறைந்த வாக்குப்பதிவு ஆகும். உங்களைப்போன்ற இளைஞர்கள் வெறும் 20% அளவில் மட்டுமே வாக்களிக்க வந்தார்கள். அதாவது உங்களில் ஐந்து பேரில் நான்கு பேர் வாக்களிக்கவில்லை. 2012-ல் மூன்றில் இரண்டு ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஓட்டளித்தார்கள். 2014- ல் ஐந்தில் இருவர் மட்டுமே வாக்களித்தார்கள். நான் சமாளிக்கத் தடுமாறும் பாராளுமன்றத்தை நான் எப்படி உங்களின் ஆதரவு இல்லாமல் எதிர்கொள்வது?

இப்படிப்பட்ட சூழலில் என்னைவிட்டுவிட்டு ஏன் ஒபாமா சாதிக்கவில்லை என்று குமைகிறார்கள். உங்களின் வாக்களிப்பு அதை மாற்றியிருக்கும் என்று புரிகிறதா? நாடு முழுக்க 50,60,70 சதவிகிதம் என்கிற அளவில் வாக்களிக்க வந்திருந்தால் வரலாறு மாறியிருக்காதா? மக்கள் அரசியலை சிக்கல் ஆக்குகிறார்கள்.

என்ன மாதிரியான சீர்திருத்தங்கள் தேவை என்று கேள்வி எழுப்புகிறார்கள்? ஆனால் அதை எப்படிச் சாதிப்பது? அதற்கு நான் ஒரு எளிய வழி சொல்கிறேன். வாக்களியுங்கள்; அது தேவை. மற்ற எவரையும்விட அதிக ஓட்டுக்கள் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.

வாக்களிக்காததற்கு நீங்கள் சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள். உங்கள் அஞ்சறைப்பெட்டியில் எவ்வளவு கடுகு இருக்கிறது என்றோ, சோப்பில் எவ்வளவு நுரை உள்ளதோ எனக் கணக்கிட்டால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. வாக்களிக்க நீங்கள் உயிரையெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் பலர் உயிர் கொடுத்துதான் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள் எனபதை தெரிந்துகொண்டால் போதும்.

நம்முடைய மூதாதையர்கள் பலர் அந்த மகத்தான வேள்வியை எதிர்கொண்டார்கள். அவர்கள் தற்போதும் உற்சாகமாக வாக்களிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வாக்களிக்கும் வாய்ப்பை கைவிடும்போது நீங்கள் உங்களின் அதிகாரத்தை கைகொள்ளும் வாய்ப்பை கைவிடுகிறீர்கள். உங்களின் வாக்குரிமையை கைவிடுகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் உரிமையை, அதிகாரத்தைத் துறந்து விடுகிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வாக்களிக்கும் உரிமைகளை தடுக்க எண்ணுபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்காமல் உதவி செய்கிறீர்கள்.

நீங்கள் எல்லாச் சமயத்திலும் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு வசதியாக இருக்கும் பொழுது மட்டும் வாக்களிக்கக் கூடாது. உங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் பொழுது மட்டும் திரண்டு வந்து வாக்களிக்கும் நீங்கள், உத்வேகம் பெறுகிற பொழுது மட்டும் வாக்களிக்கும் நீங்கள் எல்லாக் கணங்களிலும் வாக்களிக்க வேண்டும்.

ஒரு எம்பி, எம்.எல்.ஏ, வார்டு கவுன்சிலர் என்று அனைவரை தேர்ந்தெடுக்கிற பொழுதும் நீங்கள் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும். நமக்கான மக்களை, பிரதிநிதியை, நம்முடைய வினாக்களுக்குப் பதில் தரக் கூடிய நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். இது சிக்கலான ஒன்று அல்ல. வாக்களிக்காமல் உங்களின் அரசியலை சிக்கலானதாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.

இறுதியாக மாற்றத்திற்கு உரக்கப் பேசுவதோடு, பிறர் பேசுவதைக் கேட்பதும் அவசியமாகிறது. யாரோடு நீங்கள் முரண்படுகிறீர்களோ அவர்கள் பேசுவதைக் கேட்கவும், அதேசமயம் சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். நமக்கு ஜனநாயகத்தில் கூட்டாளிகள் வேண்டும். அதுவே நமக்கான வழி. கருப்பு, வெள்ளை என்று ஒன்றுமில்லை. பல கட்சி ஆட்சியிருந்த நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி ஏற்பட்ட பின்பு அந்த நாடுகள் எப்படிச் சீரழிந்தன என எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நான் காட்டமுடியும்.

நீங்கள் 100% சரியாக இருந்தாலும் ஜனநாயகத்தில் சமரசம் தேவைப்படுகிறது. அதை விளக்குவது சமயங்களில் கடினமானதாக இருக்கிறது. நீங்கள் முழுக்கச் சரியாக இருந்தாலும் உங்களோடு முரண்படுகிறவர்களோடு நீங்கள் உரையாட வேண்டும். நீங்கள் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாமல் இருந்தால், உங்களுக்கு ஒரு அற சுத்தம் இருக்கும், உங்களைப்பற்றிப் பெருமையாக நீங்கள் உணர்வீர்கள், ஆனால் , நீங்கள் எதையும் பெற்றுவிட முடியாது. நீங்கள் நினைத்ததைப் பெறமுடியாமல் போனால், ஒட்டுமொத்த அமைப்பே அயோக்கியத்தனமானது என்று நம்ப ஆரம்பிப்பீர்கள். அது மேலும் உங்களை அவநம்பிக்கை கொள்ள வைக்கும். குறைவான பங்கேற்பு, அநீதியை நோக்கிய அவலமான பயணம் வேகப்படும், மேலும் கோபமும், ஆற்றாமையும் கூடும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. அதுதான் முன்னேற்றம் என்று ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

மார்டின் லூதர் கிங்கின் எழுச்சி ஊட்டும் உரைகளைக் கேட்டிருப்போம். பிர்மிங்காம் சிறையில் இருந்து அவர் எழுதிய கடிதங்கள், அவரின் தலைமையால் கூடிய மகத்தான கூட்டங்கள் எல்லாம் நினைவு கூறத்தக்கவை. அதேசமயம் ஓவல் அலுவலகத்தில், ஜனாதிபதி ஜான்சனுடன் உட்கார்ந்து சம உரிமை சட்டம், வாக்களிப்பு உரிமை சட்டம் ஆகியவற்றில் கையெழுத்திட்டார். அவை விடுதலை பிரகடனத்தைப் போலவே குறைபாடுகள் கொண்டது என்பது சந்தேகமில்லை.

இந்த முன்னேற்றத்தின் மைல்கற்கள் கச்சிதமானது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து இருந்த அடிமை முறை, ஜிம் க்ரோவ் சட்டங்கள், இனவெறி ஆகியவற்றை முழுக்க நீக்கிவிடவில்லை. ஆனால் இந்தச் சட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தின. எது மேலானதோ அது நல்லது. உங்களுக்குக் கிடைக்கும் லாபங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அடுத்த போருக்கு வலிமையோடு தயாராகுங்கள்.
 

பிரிட்டானி பேக்நெட் என்கிற புரட்சிகரச் சிந்தனை கொண்ட கறுப்பின செயற்பாட்டாளர் தன்னுடைய கைகளை முறுக்கிக் கொண்டு கம்பீரமாகக் காவல்துறை சீர்திருத்தங்கள் சார்ந்த சட்ட வரைவில் பங்குகொண்டார். அவர் துரோகம் செய்ததாகச் சிலர் விமர்சித்தபொழுதும், அவர் சமரசத்துக்குத் தயாராக இருந்தார். போராட்டக்காரர்கள் கோரிய பல்வேறு மாற்றங்கள் அந்தச் சட்டங்களால் படிப்படியாக நிறைவேறின. கருத்தியல் தூய்மைக்காகச் சமரசத்துக்கு அவர் தயாராக இருக்கவில்லை என்றால், அந்த மகத்தான சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாக மட்டுமே இருந்திருக்கும். இப்படித்தான் மாற்றம் நிகழ்கிறது.
 

ஜனநாயகம் நம்முடைய சிக்கல்களை விவாதங்கள், கருத்துக்கள், வாக்களிப்பின் மூலமே தீர்த்துக் கொள்ளவேண்டும். வன்முறை, வெறும் அறுதிப் பெரும்பான்மை உண்மையான ஜனநாயகம் இல்லை. ஆகவே மக்களின் வாயை மூடாதீர்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். இங்கே கல்லூரிகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் ஆளுமைகளைப் பேச அழைக்காமல் தடுக்கும் தவறான போக்கு அதிகரித்து உள்ளது. அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் முட்டாள்தனமானதாக, வேடிக்கையானதாக இருந்தாலும் அவர்களைப் பேசவிடுங்கள். ஒவ்வொரு முறை ஒரு முட்டாள் பேசுகிறபொழுதும் அவன் எவ்வளவு மோசமானவன் என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்கிறான். அவர்கள் பேசட்டும். அவர்களைப் பேசவிடவில்லை என்றால், அவர்கள் அநீதிக்கு உள்ளானவர் ஆகி, தியாகிகளாக கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களாகி விடுவார்கள்.

அதற்காக அவர்களின் கருத்தை மறுதலிக்கக் கூடாது என்று பொருளில்லை. அவர்களை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், உங்களின் அற நேர்த்தியில் நம்பிக்கை வையுங்கள். சமயங்களில் உங்களின் மைய விழுமியங்களைச் சமரசம் செய்துகொள்ளாமல்,உங்களுடைய நேர்மையை மாற்றிக் கொள்ளாமல் அநீதியை முகத்துக்கு முகம் பார்த்து பொறுப்போடு பேசவேண்டி இருக்கும். அவசியம் செய்யுங்கள். கவனியுங்கள். உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு கருத்து இருந்தால், கவனித்துச் சரியென்றால் ஏற்றுகொள்ளுங்கள். அவர்கள் தவறான கருத்துக்கள் இருந்தால், அதைச் சுட்டிக்காட்டி சரி செய்யுங்கள். அவர்களுக்குக் கற்பியுங்கள். அவர்களைக் கருத்துக் களத்தில் வீழ்த்துங்கள்.

இதைக் கல்லூரிக் காலத்தில் இருந்தே நீங்கள் வழக்கமாக்கி கொண்டால் நீங்கள் அறியாமை, நிறவெறி, வெறுப்பரசியல், மடமை ஆகியவற்றை எப்படிச் சமாளிப்பது என்று கண்டுகொள்வீர்கள். இவற்றை உங்கள் வாழ்க்கை முழுக்க எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது முழுக்க நியாயமான வழியாகத் தோன்றாது. வாழ்க்கை மலர்ப்பாதை என்று யாரும் வாக்களிக்கவில்லை. உலகை மேலான ஒன்றாக மாற்றவேண்டும் என்றால் மாசுகளால் நிரம்பிய உலகிலேயே நீங்கள் துவங்கவேண்டும்.

இதுவே என்னுடைய அறிவுரை. மாற்றம் என்பது நான்கு, எட்டு வருடங்களில் வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை நம்புவதோ, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, 'வெளியே போ!' என்று அரசியல்வாதியை வெளியேற்றுவது மட்டுமே தீர்வு அல்ல. மகத்தான கொள்கைகளுக்காக ஒவ்வொரு நாளும் தீர்க்கமாகப் போராடும் குடிமகன்கள் தேவை......

ஜேம்ஸ் பால்ட்வின் இப்படி எழுதினார்: நாம் எதிர்கொள்கிற எல்லாச் சவால்களையும் சாதிக்க முடியாது, அதேசமயம், எதையும் எதிர்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் சாதிக்க முடியாது.'

இது உங்களின் தருணம். நீங்கள் ஏற்கனவே அதற்குத் தயாராகி விட்டீர்கள். உங்கள் பயணம் கொடிய ஒன்றாக இருக்கிற பொழுது, அவதூறு பேசுபவர்களின் அலட்சியக் குரல்கள் உங்களை மூழ்கடிக்கிற பொழுது, 'நீங்கள் முட்டாள், நீங்கள் நம்புவது தவறானது. நீங்கள் முயற்சியைக் கைவிடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்.' என்றெல்லாம் அவர்கள் சொல்கிற பொழுது என்னுடைய வாசகத்தைச் சொல்லிக் கொள்ளுங்கள், 'ஆம்! நம்மால் முடியும்.'

வாழ்த்துகள். நல்லவை நடக்கட்டும். கடவுள் உங்களையும், இந்த மகத்தான தேசத்தையும் ஆசீர்வதிக்கட்டும். உங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

- பூ.கொ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ