Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏன் இந்த தேசத்தில் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று தெரியுமா...?

ரு சமூகம் நாகரிகம் அடைந்து இருக்கிறது, அனைத்து தளங்களிலும் வளர்ச்சி அடைந்து இருக்கிறது, மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்  என்பதை எப்படி அளவீடு செய்வது...? தனி மனித வருவாயை வைத்து அல்லது தேசத்தின் மொத்த உற்பத்தியை வைத்து போன்ற பதில்கள் நிச்சயம் உகந்ததாக இருக்காது. ஆம். இவை, தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் அளவுகோலாக இருக்குமே அன்றி நிச்சயம் மகிழ்ச்சியான நாகரிக சமூகத்திற்கான அளவீடுகளாக இருக்காது. ஒரு சமூகத்தை மதிப்பிடுவதற்கான உண்மையான அளவுகோல், ‘சிறைச்சாலை’கள் தான்.

ஆம். எந்த தேசத்தில் சிறைச்சாலைகள் குறைவாக இருக்கின்றனவோ... அந்த தேசத்தில் குற்றங்கள் குறைவு என்று பொருள். பெரும்பாலும் குற்றங்கள், அழுத்தங்களிலிருந்துதான் பிறக்கின்றன. அந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருப்பது சமத்துவமின்மை. நிச்சயம், சமத்துவம் நிகழும் ஒரு சமூகத்தில் குற்றங்கள் குறைவாக இருக்கும் அல்லது இருக்காது. அதனால்தான் பழங்குடிகளிடம் எப்போதும் குற்றங்கள் குறைவாக இருக்கின்றன. அது ஒரு உன்னத நிலை. அப்படி ஒரு நிலையை நெதர்லாந்து தேசம் அடைந்து இருக்கிறது.

குறையும் குற்றங்கள், மூடப்படும் சிறைச்சாலைகள்:

சிறைச்சாலைகள் செயல்படும் அளவிற்கு அங்கு குற்றங்கள் நடைபெறாத காரணத்தினால், அந்த தேசம் சிறைச்சாலைகளை மூட முடிவு செய்துள்ளது. குற்றங்கள் பெருமளவில் குறைந்த காரணத்தினால், நான்கில் மூன்று பங்கு சிறை கொட்டகைகள், குற்றவாளிகள் யாரும் இல்லாமல் பூட்டிவைக்கப்பட்டுள்ளன. அதாவது, 13,500 கொட்டகைகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதனால், அந்த தேசம் ஐந்து சிறைசாலைகளை மூட முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, அந்த தேசத்தில் எட்டு சிறைச்சாலைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த தேசத்தின் மொத்த மக்கள் தொகையான  ஒரு கோடியே எழுபது லட்சத்தில், 11,600 பேர்தான் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அதாவது 100,000 க்கு 60 பேர்தான் குற்றச் செயல் புரிந்தவர்கள். ஆனால்,  அமெரிக்காவில் 100,000க்கு 716 பேர் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள்.
 
நெதர்லாந்து தேசத்தில் 2007 - 2014 வரையிலான ஏழு ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும், 23 சதவீதமாக குற்ற விகிதம் குறைந்துள்ளது. இது,  அடுத்த ஐந்து ஆண்டுகளில் 0.9 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள  சூழலில், அந்த சமூகத்திற்கு சிறைச்சாலைகள் தேவையற்றதாக ஆகிவிட்டன.

குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ள போதிலும், சிறைச்சாலைகள் மூடப்படுவதற்கு நீதிபதிகளும் காரணம் என்கிறார்கள். அதாவது, குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்களுக்கு குறைந்த அளவே தண்டனைகள் வழங்கப்படுவதால், சிறிது காலத்திலேயே தண்டனைபெற்றவர்கள் விடுதலை அடைந்துவிடுகிறார்கள். அதனால்,  பெரும்பாலான நேரங்களில் சிறைச்சாலைகளில் ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

தேவைகள்தான், பல குற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன. இங்கு தனிமனிதனின் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தி அடைந்துவிடுவதால், குற்றங்கள் குறைவாக இருக்கின்றன என்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.


பறிபோகும் வேலைவாய்ப்புகள்:

சிறைச்சாலைகள் இல்லாமல் போவது, மகிழ்ச்சி தரும் விஷயம்தான் என்ற போதிலும், இது இன்னொரு இக்கட்டையும் கொண்டு வந்துள்ளது. சிறைச்சாலைகளில் வேலை பார்த்த 1900 பேர், வேலை பறிபோகும் அபாயத்தில் இருக்கிறார்கள்.  “சமூக கண்ணோட்டத்தில் பார்த்தால், சிறைச்சாலைகள் மூடப்படுவது மகிழ்ச்சி தரும் நிகழ்வுதான். ஆனால், சிறைச்சாலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அது நல்ல சேதி அல்ல” என்கிறார்கள் ஊழியர்கள்.
 
இந்த சிக்கலை எதிர்கொள்ள நெதர்லாந்து அரசு, நார்வே அரசுடன் ஒப்பந்தம் செய்து, சிறைச்சாலைகளை வாடகைக்கு விட்டுள்ளது.

இந்தியாவின் நிலை:

ஆனால், நெதர்லாந்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் நிலை மகிழ்ச்சி தருவதாக இல்லை. 2014 ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மொத்தம், 1387 சிறைச்சாலைகள் உள்ளன. இந்த  சிறைச்சாலைகளில் மொத்தம் 3,56,561 பேர் தங்கலாம். ஆனால் 4,18, 536 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது 117.4 சதவீதம். இதில் தண்டனைக் கைதிகளைவிட, விசாரணைக் கைதிகள்தான் அதிகம். 2,82, 879 பேர் விசாரணைக் கைதிகள்.

தண்டனைகள் மூலமாக மட்டும் குற்றங்களை குறைத்துவிட முடியாது. நாம், உண்மையாக குற்றங்கள் குறைய வேண்டும் என்று விரும்புவோமாயின், இங்கு இல்லாமை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதைதான் நெதர்லாந்து நமக்கு உணர்த்துகிறது.

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close