Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிலை திறப்பு!

யாழ்ப்பாணம்: இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே நட்புறவை பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழர்களின் நூலகம். அங்கு அபூர்வமான தமிழ் நூல்களும், ஓலைச் சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வந்தன. மேலும், உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட சிறந்த நூல்களும் இங்கு இடம் பெற்று இருந்தன. சுமார் 97 ஆயிரம் நூல்களை கொண்ட இந்த நூலகம், கடந்த 1981-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி, சிங்களர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினரோ, மற்ற அதிகாரிகளோ நூலகத்திற்கு வைக்கப்பட்ட தீயினை அணைக்க முன்வரவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் எல்லாம் அக்னிக்கு இரையானது. வரலாற்றுப் பொக்கிஷமாக திகழ்ந்த யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த நூல்களுடன், நூலக கட்டடமும் சேதமடைந்தது. இதன் பின்னரும் தங்கள் ஆத்திரம் அடங்காத சிங்களர்கள் திருவள்ளுவர், அவ்வையார், ஆறுமுக நாவலர் சிலைகளையும் உடைத்து எறிந்தனர். பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்தபோது யாழ் நூலகம் புதுப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் யாழ்ப்பாணம்,  ராணுவத்தினர் வசம் சென்றது. போருக்கு பின் இந்திய உதவியுடன் யாழ் நூலகம் புதுப்பிக்கப்பட்டது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் முதன்முறையாக யாழ்ப்பாணம் சென்றார். அங்குள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் ‘புயலை தாண்டினால் தென்றல்’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் தனது பள்ளிப் பருவ வாழ்க்கையினையும், தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்துள்ளார். கலாமின் இந்தப் பேச்சு, மாணவர்களிடையே உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.

மீண்டும் 2015-ல் அரசு முறை பயணமாக இலங்கை சென்று சென்றார் அப்துல் காலம். அதுவே அவர் இலங்கைக்கு சென்று வந்த இறுதிப் பயணமாகவும் போனது. கடந்த ஆண்டு ஜூலை 27-ல் இயற்கை எய்திய அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில்,  இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் அவருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திலும், கலாமிற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் பகுதிகளில் பல இடங்களில் கலாம் பெயரில் இளைஞர் நற்பணி இயக்கங்கள் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில், இந்திய-இலங்கை இடையேயான நட்புறவை பலப்படுத்தும் வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்தில் அப்துல்கலாமின் மார்பளவு சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட 2.5 அடி உயரத்திலான கலாமின் இந்த கற்சிலையை, இலங்கைக்கான இந்திய தூதர் சின்ஹா, வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.

-இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ