Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரிட்டன் வெளியேற்றம் : இந்திய நிறுவனம் ஜாகுவார் பெரும் இழப்பை சந்திக்கும்!

பிரெக்சிஸ்ட் என்று அழைக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு பிரிட்டன் வந்து விட்டது. இந்த யூனியனில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில், 18 சதவீத உள்நாட்டு உற்பத்தி திறனும், மிகப் பெரிய வலுவான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு  பிரிட்டன். தற்போது பிரிட்டனின் வெளியேற்ற முடிவு,  ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடியை அளித்துள்ளது.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொருளதார ரீதியாக மிகுந்த தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு  5வது இடம். அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிக முதலீடு செய்யும் 3 வது நாடு இந்தியா. சுமார் 800 இந்திய நிறுவனங்கள்,  பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய யூனியனில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பிரிட்டன்தான் இந்தியாவுக்கு 'கேட்வே 'போன்று இருந்தது. ஐரோப்பாவின் பிற நாடுகளில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு, இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில்தான் தலைமையகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அந்த வகையில் மட்டும் ஒரு லட்சம் இந்திய ஊழியர்கள் பிரிட்டனில் பணி புரிகிறார்கள். குறிப்பாக இந்திய நிறுவனங்கள் ஐடி மற்றும் டெலிகாம் துறையில் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்துள்ளன.

பிரிட்டனின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர்,  இந்திய நிறுவனமான டாடாவுக்கு சொந்தமானது. பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதால் ஜாகுவார் நிறுவனம்,  ஆண்டுக்கு ஒரு பில்லியன் பவுண்டு லாபத்தை இழக்கவுள்ளதாம். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி வரி விதிப்பு கிடையாது. இனிமேல் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.

அந்த வகையில் ஜாகுவார், தனது லாபத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிடும் ,கடந்த 205-16 ம் ஆண்டில் ஜாகுவார் நிறுவனம், வரி செலுத்தாமல் 1.6 பில்லியன் பவுண்டுகளை லாபமாக ஈட்டியுள்ளது. ஐரோப்பாவின் மிகப் பெரிய கார் சந்தையை வைத்திருக்கும் ஜாகுவார் நிறுவனம்,  2020 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பிரெக்சிஸ்ட் வாக்கெடுப்பு அதற்கு பெரும் சவாலாக அமைந்து விட்டது.

ஜாகுவார் மட்டுமல்ல பிற இந்திய நிறுவனங்களுக்குமே பிரச்னைதான். இதுவரை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்ற வகையில் வர்த்தகக் கொள்கை இருந்தது. தற்போது இந்திய நிறுவனங்கள் வர்த்தக வியூகத்தையே முற்றிலும் மாற்ற வேண்டும். அது மட்டுமல்ல பிரிட்டனுக்குமே புதிய வர்த்தக கொள்கையை வடிவமைப்பதில் பெரும் சவால் காத்திருக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதையடுத்து, அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு ஒரே நாளில் 9 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. இது  சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் பணம்,  கச்சா எண்ணெய் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியா பங்குச்சந்தையிலும் பிரிட்டன் பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய பங்கு வர்த்தகத்தில் இன்று காலை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசியப் பங்கு சந்தை நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டது. இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்தா தாஸ், எத்தகைய பாதிப்புகளையும் எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும், பிரிட்டன் நிலவரம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து  ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close