Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியில் ஓர் நாணய சங்கமம்!



ழங்கால நாணயங்கள் மற்றும் பொருட்கள் மீதான மதிப்பை உணர்த்தும் விதமாக திருச்சியில்  நாணய கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இன்று காலை   'திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக,  'உலகப் பணத்தாள்கள் நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் கண்காட்சி' திருச்சி,  சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்பா ஊர்வசி திரையரங்க வளாகத்தில் இருக்கும் ராஜேஸ்வரி அரங்கில்  துவங்கியது. இன்று துவங்கி, ஜூலை 3 ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில்,  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது சேகரிப்புகளை இடம்பெறச் செய்தனர். பொதுமக்களின் பார்வைக்கு பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள், விலைமதிப்பு மிக்க கலைப்பொருட்கள்  உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் தலைவரான  விஜயகுமார்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய ரூபாய் குறியீட்டை வடிவமைத்த உதயகுமார், பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் தென்னிந்தியச் செயலாளர் ரோலன்ட்ஸ் நெல்சன் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய  உதயகுமார், " நான் மும்பையில் படித்தேன். இந்திய மொழிகளின் எழுத்து வடிவம் குறித்தும், குறிப்பாக பழம்பெரும் மொழியான தமிழ்மொழியின் எழுத்து வடிவம் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளேன்.

கடந்த 2009 ம் ஆண்டு இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான அறிவிப்பு வெளியானது.  இந்த போட்டியில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்பதால், நானும் பங்கேற்றேன்.  இந்த போட்டியில் வெற்றி அடைந்தால், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்திருந்தார்கள்.  இதில் கலந்துகொள்ள இந்தி மொழியின் எழுத்து வடிவமான 'தேவநகரி’ எழுத்துக்களை ஆய்வு செய்தேன். இந்தி மொழியில் உள்ள 'ர’ என்ற எழுத்து 'ருபியா’ என்ற ரூபாயை குறிக்கும் முதல் எழுத்து என்பதால் அதை தேர்வு செய்தேன். அதுபோலவே ஆங்கில மொழியில் 'ஆர்’ எழுத்து, ரூபாயை குறிக்கும் முதல் எழுத்து என்பதால் அதை தேர்வு செய்தேன். இவை இரண்டையும் இணைத்து 'ஆர்’ போன்ற எளிதான எழுத்து வடிவத்தை உருவாக்கினேன்.

இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பது போன்ற உருவாக்கத்தை தெரிவிக்கவும், இந்திய பொருளாதாரம் எப்போதும், மற்ற நாடுகளுக்கு சமமானது என்பதை உணர்த்த 'ஈக்குவல்’ என்ற குறியீட்டை 'ஆர்’ எழுத்தின் மேல் பகுதியில் இணைத்து, ரூபாய்க்கு புதிய குறியீட்டை உருவாக்கி, அந்த குறியீட்டையே அந்தப் போட்டிக்காக அனுப்பினேன். என்னைபோலவே 8,000 முதல் 10 ஆயிரம் பேர் அந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். அதில் 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வானோம்.

ஐந்து பேரில் ஒருவனான என்னிடம், நான் உருவாக்கிய ரூபாய்க்கான குறியீடு குறித்து விளக்கம் கேட்டு, நிதி அமைச்சகத்திலிருந்து கடிதம் அனுப்பினர். அவ்வளவுதான், அதன்பிறகு எந்த தகவலும் இல்லை. கடைசியில் நான் தயாரித்த ரூபாய் குறியீடு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகை நண்பர் ஒருவர் சொல்லித்தான் தெரியும். இந்த குறியீட்டை உருவாக்கியதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக சொல்கிறார்கள். கடும்உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் தலைவரான விஜயகுமார் ,
" இன்று உதயகுமார் உருவாக்கிய இந்திய ரூபாய் மதிப்பீட்டு குறியீட்டை, 100 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவரை முறையாக மத்திய அரசும், மாநில அரசும் அங்கீகரிக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.  

தொடர்ந்து பேசிய அவர், " கண்காட்சியில் ஆசிய கண்டத்திலுள்ள 50 நாடுகளின் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்றுள்ளன. தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளின் பல்வேறு பணத்தாள்களும் நாணயங்களும் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெங்கால், மும்பை, மெட்ராஸ் மாகாணங்கள் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள், பெங்கால், கொல்கத்தா யூனியன் வர்த்தக வங்கி பணத்தாள்கள், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் காலத்திலும், பிரசிடென்சி பணத்தாள்கள், குடியரசுக்குப் பிறகு பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ. 1 முதல்  1000 வரையிலான பணத்தாள்கள், வரலாற்றுப் பதிவுகள், பிறந்தநாளைத் தாங்கி வந்துள்ள எண்கள், கிழிந்த, பிழையுடன் வந்த பணத்தாள்கள், அமெரிக்கா முதல் தாய்லாந்து வரையிலான 210 நாடுகளின் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பணத்தாள்கள், 220 நாடுகளின் நாணயங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

சங்ககால முத்திரைக்காசுகள், சோழர், பாண்டியர், ரோமானியர், பல்லவர், பிற்காழச் சோழர் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் வெளியான காசுகள், 1835 முதல் 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தாவில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் அச்சிட்டு வெளியான அரை அணா, 2 அணா, 4 அணா, 8 அணா, கால் ரூபாய் மதிப்பில் பல்வேறு வடிவங்களில் உள்ள காசுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கூடவே இவற்றுடன் கடல் குதிரைகள், நட்சத்திர ஆமைகளின் கல் படிமங்கள், கல் மரப் படிமங்களும் காட்சிக்கு  வைக்கிறார்கள். இந்த கண்காட்சியில் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்கள் முதல் யூரோ நாணயங்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன'' என்றார்.


முதல் நாளான இன்றே பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்களுடன் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச்சென்றனர்.  இன்னும் பழமையை மனிதன் மறக்கவில்லை. அதனை தேடிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது இதுபோன்ற விழாக்கள்.

 

- சி.ய.ஆனந்தகுமார்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ