Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசென்சு! -இலங்கை அரசு பரிசீலனை

கொழும்பு: இலங்கைக் கடல் பகுதிக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளை அனுமதிப்பதற்கான உரிமத்தை வழங்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைவதாக கூறி அந்த நாட்டு கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அந்த நாட்டு மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கி மீன்களை பறிப்பது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதனால் தமிழக மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர் கதையாகி வரும் இந்த பிரச்னையை தீர்க்க இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும் இரு நாட்டு மீனவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. எனினும் சுமூக தீர்வு இன்னும் ஏற்படவில்லை.

இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டிக்குமாறும், கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வருகிறார்.

பாக் நீரிணை (பாக் ஜலசந்தி) பகுதியில் மீன்பிடிப்பதற்கு தமிழர்களுக்கு இருக்கும் வரலாற்று உரிமையை இலங்கை அரசு அங்கீகரிக்காமல் விடாப்பிடியாக செயல்படுகிறது என்று பிரதமருக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இந்திய மீனவர்கள் சிலருக்கு இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு லைசென்சு வழங்கும் முறையை அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளது.

'குறைவான எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களுக்கு 'லைசென்சு' வழங்கும் திட்டம் குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனினும் இது குறித்து இறுதியான முடிவு இன்னும் எடுக்கவில்லை. இரு தரப்புக்கும் ஒரு சிக்கலான பிரச்னை இது' என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணசேனா ஹெட்டியாராச்சி தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக நுட்பமான பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு தூதரகம் வாயிலாக இந்திய அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களுக்கு லைசென்சு வழங்கும் திட்டம் இந்திய தரப்பிலிருந்தே கூறப்பட்டது என்று கூறியுள்ள அந்த பத்திரிகை, இந்த உத்தேசத் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலோ அல்லது இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்தாலோ இலங்கை மீனவர் அமைப்புகள் கடுமையாக எதிர்க்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close