Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இத்தாலியில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து! - 25 பேர் பலி

கோரடா: இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி கொண்ட பயங்கர விபத்தில் சுமார் 25 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒருவழி ரயில் பாதையில் சென்ற ரயிகள், புக்லியா என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இரண்டு ரயில்களும் நான்கு பெட்டிகளை கொண்டவை. ரயில்கள் மோதிய வேகத்தில், இரண்டு ரயில்களிலும் உள்ள முன் பெட்டிகள் சுக்கு நூறாக உடைந்தன.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கோரடா நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில், சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒருவழி பாதையில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதற்கான பின்னணி காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதோடு, அதிகாரிகளை விபத்து நேரிட்ட பகுதிக்கும் அனுப்பி உள்ளது.

இந்த விபத்து துன்பகரமான தருணம் என்று இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி கூறி உள்ளார். இதுவரை மீட்கப்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதால், அவர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வரும்படி கோரடா நகர மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்