Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ-போன்களை நொறுக்கும் சீனர்கள்!


ம்ம ஊர்ல கிளாஸ் ரூம்ல ஒளிஞ்சு ஒளிஞ்சு ‘பேசிக் மொபைல்’ல மெசேஜ் பண்ற யூத்களும் சரி, ஈ.எம்.ஐ கட்டி கேலக்சி நோட் வாங்கும் ஐ.டி கோஷ்டிக்கும் சரி, மிகப்பெரிய வாழ்நாள் லட்சியம் ஐ-போன் வாங்குவதாகத்தான் இருக்கும். தன் மீதான வசீகரத்தை நாளுக்கு நாள் கூட்டிக்கொண்டே போகும் ஐ-போன் தான் மொபைல்களின் சூப்பர் ஸ்டார். ஆனால் பலரின் கனவு மொபைலான ஐ-போனை, அசால்டாக உடைத்து நொறுக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் சீன இளைஞர்கள்.

தெற்கு சீனக் கடல் பிரச்னையில் ,சர்வதேச நடுவர் நீதிமன்றம் சீனாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால்,  கொதித்துப்போன இளைஞர் வட்டம், அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தை நூதன முறையில் துவங்கியுள்ளது.

தெற்கு சீனக்கடலில், பல செல்வங்களை உட்கொண்ட பாராசெல்ஸ் மற்றும் ஸ்ப்ராட்லிஸ் தீவுக் கூட்டங்களுக்கு சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகள் மல்லுக்கட்டி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ், சீனா மீது சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம், இவ்வழக்கை கடந்த வாரம் விசாரித்தது. அதன்பின்னர், சீனாவின் ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது எனவும், சீனா அந்தத் தீவுகளைத் தாண்டி தெற்கு சீனக் கடலில் பெரும்பகுதியையே தனது எல்லைக்குள் வரைந்துள்ளது மிகப்பெரிய குற்றம் எனவும் அந்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் சீனாவோ அத்தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் அமெரிக்காவோ, சீனா இத்தீர்ப்பை ஏற்க வேண்டுமென்றும், இவ்விஷயத்தில் தான் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தது. அப்படிக் கூறியிருந்தாலும் அமெரிக்காவின் நிலைப்பாடு சீனாவிற்கு எதிராக இருப்பது போன்றே தெரிந்தது. பிரச்னைக்குரிய தெற்கு சீனக்கடலில் போர்க்கப்பலை நிறுத்திய அமெரிக்கா, இங்கு கடல் வழிப் பயணத்திற்கான சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது என்று கூறி பல்சைக் கூட்டியது.

ஏற்கனவே வட கொரியா - தென் கொரியா பிரச்னையில் இரு நாடுகளும் மல்லுக்கட்டி வரும் நிலையில், அமெரிக்கா இந்த விஷயத்திலும் மூக்கை நுழைத்ததால் சீனர்கள் சீற்றம் கொண்டனர்.

இந்நிலையில் ஒரு சில இளைஞர்கள், இந்த விசித்திர அமெரிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவை எதிர்த்து தங்கள் தேசப்பற்றைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவின் அடையாளமாகக் கருதப்படும் ஐ-போன்களை அடித்து நொறுக்கினர். இரும்புக் கம்பிகளால் அடித்தும், கால்களால் மிதித்தும் அந்த காஸ்ட்லி போனை டேமேஜ் செய்தனர். அதுமட்டுமின்றி மேலும் ஒரு கும்பல் KFC உணவகத்தை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தங்கள் உரிமைக்காக கொடிப் பிடித்து ஊர்வலம் வந்த அவர்களுக்கு தற்போது பிலிப்பைன்சைக் காட்டிலும் அமெரிக்காதான் மிகப்பெரிய எதிரியாய்த் தெரிகிறது.

இந்தப் போராட்டத்தை சீனாவின் தேசியப் பத்திரிக்கைகள் சாடியுள்ளன. தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட இது சரியான முறை இல்லை என்றும், இது போன்ற தீவிர தேசியவாதம் நாட்டின் இறையான்மையைக் கெடுத்துவிடும் என்றும் அவை கூறியுள்ளன. ஆனால் இந்த வகையான போராட்டம் சீன மக்களிடையே பெருத்த ஆதரவைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

“சீன மக்கள் அதீத தேசப்பற்று மிக்கவர்கள் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சாட்சி” என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இது போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அதேசமயம் இன்னொரு கோஷ்டியோ இந்த கும்பலைக் கலாய்த்துக் கொண்டிருக்கிறது. KFC உணவகங்களில் தங்கள் ஐ-போன்களோடு செல்ஃபி எடுத்து,  சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை ‘தேசப்பற்றுக் குண்டர்கள்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா எல்லா விஷயத்தில் தலையிடுவதையும் நிறுத்தப்போவதில்லை. சீனா வழக்கம்போல் தன் பிடிவாதத்தை விடப் போவதுமில்லை. இன்றைய நிலையில் உலகின் இரு மிகப்பெரிய நாடுகளும் இப்படி மறைமுகமான ஒரு களத்தில் மோதிக்கொண்டிருக்கின்றன.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் பனிப்போர் முடியவே பல ஆண்டுகள் ஆகின. இந்நிலையில் சீனாவுடன் அடுத்த பனிப்போருக்கு அமெரிக்கா தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

- மு.பிரதீப் கிருஷ்ணா

 

Save

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ