Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'யாகூ' வீழ்ந்த கதை!


ந்தியாவில் இருக்கும் அனைவரிடமும், ஆதார் கார்டு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் ஐடி இருக்கும். அவ்வளவு தூரம் கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு, ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஹேங் அவுட்ஸ் போன்றவற்றின் மூலம் நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. ஏதேனும் இணையத்தில் தேட வேண்டும் என்றாலும் கூட, 'கூகுள் செய்து பாருங்கள்' என்றுதான் சொல்கிறோம். ஆனால், இவையெல்லாம் ஒரு காலத்தில் யாகூவிற்கு சொந்தமாய் இருந்தன. கிராமங்களில் கேபிள் கனெக்சன் என்பதை எப்படி, தனியார் சேனல் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ  அது போலத்தான் இணையத்தின் முகமாக யாகூ இருந்தது.

பிரவுசிங் சென்டர்கள் தமிழகத்தின் பெரு நகரங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட காலம் அது. யாகூவில் ஐடி வைத்து இருப்பதே ஒருவித சோஷிய ஸ்டேட்டஸ்தான். "உனக்கு நான் இ மெயில் அனுப்பினேனே, வரவில்லையா" என்று கேட்டால், மீண்டும் அதை உச்சரித்து சொல்வோம். அதன் பின்னர்தான் டொமைனில் இருக்கும் co.in பதிலாக .com என கொடுத்து தொலைத்ததை உணர்ந்திருப்போம். 80களில் பிறந்தவர்களுக்கு ஹாட்மெயில் எனில், 90 களில் பிறந்தவர்கள் பெரிதும் பயன்படுத்தியது யாகூமெயில் தான். பெரும்பாலானவர்கள், தங்கள் முதல் இமெயிலை, யாகூவில்தான் அனுப்பி இருப்பார்கள். ரெஃபரென்ஸ் மெயில் தேவை என்பதால், "ஆமா, உன் ஐடி என்னடா?" என நண்பர்களைத் தொந்தரவு செய்து இருப்போம்.


சிலர் பிரவுசிங் சென்டரில் நுழைந்ததும், கண்களில்படுவது யாகூ சாட் பாக்ஸின் ASL தான். (புரியாதவர்கள் கூகுள் செய்துகொள்ளவும்). யாகூ என்பது சர்ச் என்ஜின் என்பதைக் கடந்து, அதிலேயே எல்லாமும் இருந்தன. யாகூ ஃபோட்டோஸ், யாகூ கிரீட்டிங்ஸ் என முனியாண்டி விலாஸ் ஹோட்டல் தட்டு போல், எல்லா ஐட்டங்களும் டிஸ்பிளே ஆகிக் கொண்டே இருக்கும். ஆனால், அதுதான் பலருக்கு பிடிக்காமல் போவதற்கும் காரணமாய் அமைந்தது. 'மனிதன் தனக்கு மிகவும் பிடித்த ஒன்றை, சில நாட்களிலேயே வெறுக்கவும் தொடங்குவான்' என்பார் ராஜாஜி. அதுதான் மனித மனம். இனியும் எனக்கு ஸ்பூன் ஃபீட் தேவையில்லை என உணர்ந்தனர் அப்போதைய இணையவாசிகள். அதற்கேற்ப யாகூவின் மெயில்களும் ஸ்பாம்களை கொட்டத் தொடங்கின. யாகூவை பயன்படுத்தும்போதே, கூகுளுக்கு தாவிக்கொண்டு இருந்தார்கள் நெட் வாசிகள்.  கூகுள் இவை அனைத்தையும் பின்னாளில் புரட்டிப்போட்டது. இதனையடுத்து, கூகுள் தனது தாரக மந்திரமாக பின்பற்றியது ஒன்றே ஒன்றுதான். அது, மேக் இட் சிம்பிள்.

1994-ம் ஆண்டு, ஜனவரி மாதம்  "Jerry and David's Guide to the World Wide Web" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச் இஞ்சின், சில மாதங்களில் 'யாகூ' என மாற்றப்பட்டது. யாகூவிடம் எல்லாமே இருந்தது. யாகூ நியூஸ், ஃபைனான்ஸ், ஸ்போர்ட்ஸ், இமெயில், சமூக தளங்கள் என எல்லாவற்றையும், ஒருங்கிணைத்தது யாகூ. ஆனால் நாம் எதற்காக தொடங்கப்பட்டோம், யாகூ என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு, யாகூவால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு யாகூவில் விஷயங்கள் கொட்டிக் கிடந்தன. ஆனால், அவை பலருக்கு பயனற்றதாகதான் இருந்தன.

பல்வேறு சி.இ.ஓக்கள், பல்வேறு கையப்படுத்தல்கள், பல வாய்ப்புகள் என யாகூவை மீட்டெடுக்க பலர் முயற்சி செய்தார்கள். ஆனால்,  நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் நங்கூரம் போல், யாகூவின் பாதை கீழ்நோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. யாகூவின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதன் அடையாளம்தான் கடந்த வாரம் நிகழ்ந்தது. அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனமான வெரிசான், யாகூவை 4.8 பில்லியன் டாலர்களுக்கு வாங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு, வெரிசான் AOL-ஐ 4.4 பில்லியன் டாலருக்கு வாங்கியது. 'டிஜிட்டல் சந்தைக்குள் தன்னை விரிவுப்படுத்த, யாகூவின் 60 கோடி மொபைல் வாடிக்கையாளர்கள் உதவுவார்கள்' என பெரிதும் நம்புகிறது வெரிசான். 'யாகூவை அடிமாட்டு விலைக்கு வாங்கி இருக்கிறது வெரிசான்' என விமர்சனங்கள் எழுந்தாலும், மூழ்கும் கப்பலுக்கு இந்த விலையே அதிகம் என்ற கருத்தும் எழாமல் இல்லை. 2000-ம் ஆண்டு 118.75 டாலர் என இருந்த அதன் பங்கு வர்த்தகம், 2001-ம் ஆண்டு 8.11 டாலராக குறைந்தது. 2012-ம் ஆண்டின் ஆரம்பத்தில், யாகூ தன்னிடம் வேலை பார்த்த 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது யாகூவின் மொத்த சதவிகிதத்தில் 14%.

யாகூவின் கடைசி நம்பிக்கையாக, கூகுளில் வேலை பார்த்த மெரிசா மேயர்,  யாகூவின் சி.இ.ஓவாக 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.அசுர பலத்தில் ராட்சஷ வேகத்தில் வேலைகள் நடந்தன. பல்வேறு நபர்கள் , யாகூவை மீண்டும் ஏறெடுத்து பார்க்க ஆரம்பித்தார்கள். மீண்டும் ஒருமுறை குறிஞ்சி மலர் பூக்கும் என்ற ஆர்வத்தில் இருந்தது யாகூ. ஆனால், இணையதளம் என்பது கூகுள், ஃபேஸ்புக் போன்ற டைனோசர்களின் வசம் வந்து பல மாதம் ஆகிவிட்டது என்பதை யாகூ உணர, பல காலம் ஆனது.

யாகூவின் நிலைமை இப்படி எனில், அதிர்ஷ்ட ராஜா என நினைத்து வாங்கிய நிறுவனங்களும், யாகூவை மேலும் சோதித்தது. சமூக வலைதளமான டம்ப்ளரை(  Tumblr  ) வாங்கியது யாகூ. ஆனால் ஸ்னேப்சாட் , மீடியம் போன்ற தளங்கள், கொக்கரித்து போட்டிக்கு நின்றன. யாகூவிற்கு லாபம் வரக்கூடிய, ஒரு இடமாக சைனாவின் அலிபாபா மட்டும்தான் இருந்தது. ஆனால் அதிலும், பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இறுதியில் மெரிசா மேயராலும், இணையத்தின் முதல் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.

திங்களன்று மெரிசா மேயர் தனது இமெயிலில், "இந்த உலகத்தை மாற்றியமைத்த நிறுவனம் யாகூ. யாகூ இணையத்தை, இமெயிலை, சர்ச்  இன்ஜினை, பிரபலப்படுத்தியது, பரவலாக்கியது" என்று கூறி இருக்கிறார். ஆம். யாகூ பிரபலப்படுத்தியது, பரவலாக்கியது. மெரிசா மேயருக்கும் தெரிந்தே இருக்கிறது, 'யாகூ' என்பது இறந்த காலம் ஆகிவிட்டது என்று.

ஒரு சாம்ராஜ்யம் வீழ்வெதென்பது ஒருமுறைதான் நடக்கும். ஆனால், அதற்குரிய காய் நகர்த்தல்கள் பல ஆண்டுகள் நடக்கும். யாகூவின் வீழ்ச்சி என்பதும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இன்னமும் யாகூ முழுதாக வீழ்ந்துவிடவில்லை. இன்னும் கொஞ்சம் மீதம் இருக்கிறது. 22 ஆண்டுகளாக இணையத்தில் சர்ச் என்ஜினாக பணி செய்கிறது யாகூ. இன்டர்நெட் டைரக்டரி, சர்ச் இன்ஜின், வெப் போர்டல், என யாகூ மாறிக்கொண்டே தான் இருக்கிறது. இன்னமும் செய்யும், ஆனால், அது எந்த விதமான பாதிப்பையும் இணையப் புரட்சியில் ஏற்படுத்தாது என்பதை தீர்க்கமாக நம்புகிறார்கள் நெட்டிசன்ஸ். காரணம், யாகூ வெல்வதற்கே ஒரு இணையப்புரட்சி தேவைப்படுகிறது.

AOL-ன் மெயில் வசதிகளை, இன்னமும் வெரிசான் 'ஷட் டவுன்' செய்யாததால், யாகூ மெயிலும் பத்திரமாக இருக்கும் என நம்பலாம். பழைய நினைவிற்காக ஒருமுறை யாகூ மெயில் ஐடியை திறந்து பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாஸ்வார்டு என்ன என்பதுதான் தற்போதைய பிரச்னையே.

-கார்த்திகேஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close