Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ உலக இளைஞர்களே... கேர்ள் ஃப்ரெண்டே சரணம்! #Girlfriends Day

 

ன்று உலக கேர்ள் ஃப்ரெண்ட் தினமாம். அவனவன் அனுபவிக்கும் கொடுமைகளில் இந்த தினத்தை கொண்டாடவா மனசு வரும்? இன்டக்ரல் கால்குலஸ் கணக்குகள் கூட புரிந்துவிடும். ஆனால் இந்த கேர்ள் ஃப்ரெண்டை சமாளிக்கும் வித்தை மட்டும் அவ்வளவு எளிதில் வசப்படாது. ஆட்கள் வேறு என்றாலும் கதைகள் ஒன்றுதான், என்பதால் உலக ஆண்களின் துயர் துடைக்க இந்த டிப்ஸ். ஃபாலோ பண்ணுங்க. ஹேப்பியா இருங்க.

* முதல் பிரச்னையே வாட்ஸ்-அப் லாஸ்ட் சீனில்தான் தொடங்குகிறது. 'நான் தூங்குனதுக்கு அப்புறமும் ஏன் ஆன்லைன்ல இருந்த?, ஏன் லாஸ்ட் சீன் ஹைட் பண்ண? போன்ற கேள்விகளை எல்லாம் சமாளிக்கவே முடியாது. இதற்கு பயந்து ஹைக் மெசஞ்சருக்கு ஜாகை மாறினால் அங்கும் வந்து, 'என்னை ஏன் ஃபேவரைட்டா மார்க் பண்ணல? என பிராணனை வாங்குவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி, 'நோக்கியா' பேஸிக் மாடலிடம் சரணடைவதுதான். எவ்வளவு நேரம் பேசினாலும் சூடாகாது, கோபத்தில் தூக்கி எறிந்தாலும் கல்லு போல கிண்ணென இருக்கும் என இதில் பல பக்க பலன்கள் வேறு இருக்கின்றன.  

* பேய் வருவதற்கு நான்கைந்து அறிகுறிகள் இருப்பது போல சண்டை வருவதற்கும் அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றில் முதல் அறிகுறி, தென்படும்போதே உஷாராகிவிட வேண்டும். பேச்சுவாக்கில், 'சார்ஜ் கம்மியா இருக்கு, இந்த நெட்வொர்க் வேற கண்டெயினர் காசு மாதிரி காணாம, காணாம போயிடுது' என அவ்வப்போது எடுத்துவிட்டுக் கொண்டேயிருங்கள். சண்டை முற்றும் நொடியில் சட்டென கட் செய்து தப்பித்து விடலாம். எப்படியும் கொஞ்ச நேரத்தில் அந்தப்பக்கத்து புயல் கரை கடந்துவிடும். அப்புறம் போன் செய்து, 'நான்தான் அப்பவே சொன்னேன்ல சார்ஜ் இல்லனு, அதான் கட்டாயிடுச்சு' என சொல்லி சமாதானமாகிவிடுங்கள்.

* அடிக்கடி ஹோட்டலுக்கு செல்ல வேண்டியது இருக்கும். ஆனால் பில்லை அவர்களை கட்டச் சொல்ல நம் கெத்து இடம் தராது. இதனால் நம் புண்ணியத்தில் ஹோட்டல் முதலாளி இன்னொரு கிளையே திறந்துவிடுவார். இதிலிருந்து தப்பிக்க, 'இந்த டிரஸ் உனக்கு செமையா இருக்கு, இதுக்கே நீ ட்ரீட் தரணும்', 'ஆபிஸ்ல இன்னிக்கு 8 மணிநேரம் வேலை பாத்தீயா? வாவ், இதுக்காகவே நீ ட்ரீட் தரணும்' போன்ற பிட்களை அடிக்கடி போடுங்கள். மாசக் கடைசியில் அதை சொல்லி நம் செலவைக் குறைக்கலாம்.

* படமோ, அவுட்டிங்கோ கண்டிப்பாக நாம் சொன்ன நேரத்துக்கு போய் ஆஜராகப் போவதில்லை. நம் நேரத்துக்கு அன்றைக்கென பார்த்து நம் கேர்ள் ஃப்ரெண்ட் வரும் சாலைகள் எல்லாம் சமத்துவ மக்கள் கட்சி போல வெறிச்சோடி இருக்கும் என்பதால் அவர்கள் கரெக்ட் டைமிற்கு வந்து கடுகடுத்துக் கொண்டிருப்பார்கள். சரி, திட்டு வாங்கிக் கொள்ளலாம் என அசால்ட்டாக செல்லாதீர்கள். 'வர்ற வழியில் உனக்கு பிடிச்ச பானிபூரி பார்சல் வாங்கிட்டு வந்தேன்' என சொல்வதற்கு வசதியாக எதையாவது வாங்கி அவர்கள் கையில் திணித்து விடுங்கள்.

* நம்மவர்கள் நிறைய பேர் செய்யும் தவறு இது. வீக்கெண்ட் பார்ட்டிக்கு எப்படியும் அந்தப்பக்கம் அனுமதி கிடைக்காது. 'நான் முக்கியமா, பார்ட்டி முக்கியமா? போன்ற உபரிக் கேள்விகள் வேறு. இதிலிருந்து தப்பிக்க, இந்த வாரம் ஒரு முக்கியமான கான்ஃபரன்ஸ் இருக்கு, ரிவ்யூ மீட்டிங் இருக்கு' என முன்பே சொல்லிவிடுங்கள். அப்புறம் பார்ட்டியிலும் கை, காலை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் 'உற்சாக' மிகுதியில் எதையாவது அனுப்புவோம். காலையில் அதை வைத்து மூன்றாம் உலகப்போர் நடக்கும். இதனால் முன்பே ஃப்ளைட் மோடுக்கு பறந்துவிடுவது உத்தமம்.

* பொசஸிவ்னெஸ் - இரண்டு பக்கமும் குத்தும் கத்தி இது. வேறொரு பெண்ணிடம் பேசுவதைக் கண்டால், அவர்கள் முகம் கட்டாயம் தக்காளிப் பழமாகிவிடும். அதிலிருந்து தப்பிக்க, 'நீ போட்டுருக்கிற இந்த கலர் உன்னை விட என் ஆளுக்குதான் செமையா இருக்கும்னு அவகிட்ட சொன்னேன்மா' போன்ற பிட்டுகளை போடுங்கள். 'ஏண்டா இப்படி அபாண்டமா பொய் பேசுற?' என உங்கள் மனசாட்சி காறித் துப்பும்தான். அட, துடைச்சு போட்டு போங்க பாஸ்!

* நீங்கள் கால்ஷீட் நிரம்பி வழியும் சினிமா ஸ்டாராகவே இருந்தாலும் சரி, மணிக்கணக்கில், மைல்கணக்கில் அவர்களோடு திரிந்து ஷாப்பிங் செய்தே ஆகவேண்டும். அந்த நேரத்தில் காட்டுத்தனமாக போர் அடிக்கும். இதிலிருந்து தப்பிக்க லேட்டஸ்ட்டாக ஒரு உபாயம் இருக்கிறது. போக்கிமான் கோ விளையாட தொடங்கிவிடுங்கள். பிக்காச்சுவை பிடித்தமாதிரியும் ஆச்சு, பிடித்தவர்களோடு நடந்த மாதிரியும் ஆச்சு.

* 'நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்' என அந்தப்பக்கத்திலிருந்து மெசேஜ் வந்தால் நீங்கள் அவர்களிடம் சொல்லாத ஏதோ ஒரு விஷயம் அவர்களுக்கு தெரிந்துவிட்டதென்று அர்த்தம். உடனே 'நான் எல்லாம் ரொம்ப உத்தமனாக்கும்' என சீன் போடாதீர்கள். கண்ணை பார்த்து கபக்கென பிடித்துவிடுவார்கள். 'என் கஷ்டம் என்னோட போகட்டும், நீ சிரிச்சாதான் அழகா இருப்ப, இதெல்லாம் சொல்லி உன்ன அழ வைக்க விரும்பல' போன்ற விக்ரமன் பட டயலாக் எல்லாம் அள்ளிவிடுங்கள். அவுட் டேட்டட்தான். ஆனாலும் ஒர்க் அவுட் ஆகும். சும்மாவா சரவணன் மீனாட்சி ஹிட் ஆவுது?

* டீம் டின்னர், டீம் அவுட்டிங் எல்லாம் போனாலும் அவர்களோடு பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதிலிருந்து தப்பிக்க, 'படத்துல மழையில ஆடுற மஞ்சிமா மோகனை பாக்குறப்போ உன்ன பாக்குற மாதிரியே இருக்கு.( மனசாட்சி - த்தூ! த்தூ! த்தூ!), அந்த க்ரில் சிக்கனை உன் கையால சமைச்சு சாப்பிட்டிருந்தா சொர்க்கமா இருந்திருக்கும்' (இந்த பொழப்புக்கு... - இதுவும் அதே மனசாட்சிதான்) போன்ற செட்டப்களை கைவசம் வைத்திருங்கள். யூஸ் ஆகும்.

* 'நான் யாரு உனக்கு?, என்னை எவ்வளவு பிடிக்கும்?' - இந்த ரெண்டு கேள்விகளும் அதிமுக கட்சிப்பதவி போல, அடிக்கடி வந்து போகும். மற்ற விஷயங்களை கூட மன்னித்துவிடுவார்கள். இந்தக் கேள்விகளுக்கு சுமாரான பதில் சொன்னால் கும்பிபாகம்தான். எனவே வெட்டியாய் இருக்கும் தருணங்களில் இவற்றுக்கான பதிலை வெரைட்டியாய் யோசித்து லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள். கேட்கும் நேரத்தில் படக்கென பதில் சொல்லி பச்சக்கென இதயத்தில் இடம்பிடித்துவிடலாம்.

பி.கு - இந்த கேள்விகளுக்கு கூகுள் எல்லாம் பதில் சொல்லாது. தேடிப் பாத்தாச்சு. ஸோ, உங்க மூளையே உங்களுக்கு உதவி.

- நித்திஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ