Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீப்பற்றி எரிந்த எமிரேட்ஸ் விமானத்தின் கடைசி நிமிடங்கள்! - வீடியோ காட்சி

திருவனந்தபுரத்தில் இருந்து, நேற்று துபாய் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில், 20 நாடுகளைச் சேர்ந்த 282 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என மொத்தம் 300 பேர் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கேரளத்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்து வரும் இவர்கள், குடும்பத்துடன் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த விமானம், துபாய் விமான நிலையத்தில் நேற்று மதியம் 12.50 மணிக்கு தரையிறங்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே விமானத்தின் முன்சக்கரம் சரியாக இயங்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானி, துபாய் விமான நிலையத்தை தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்ததும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் விமானம் தரையிறங்கிய அடுத்த நிமிடமே,  விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து அபயக்குரல் எழுப்பினர். இருப்பினும் தயாராக நின்றிருந்த மீட்புக் குழுவினர், அவசரக் கதவு வழியாக விமானிகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். தீயணைப்பு வண்டிகள், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

 பயணிகளை வெளியேற்றும் முயற்சி மள மளவென நடத்தப்பட்டு அத்தனைப் பயணிகளும் விமானத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல், அத்தனை பயணிகளையும் தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆனால் விமானப் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில், ஜாசிம் இஸ்ஸா அல் பாலுசி என்ற தீயணைப்புப்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். 

இந்நிலையில், விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்து காயமின்றி தப்பிய கேரளாவை சேர்ந்த பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எங்கள் விமானம் அவசரமாக தரையிறங்கிய போது, விமானத்தின் முன்பக்க சக்கரம் உடைந்தது. இதனால் விமானம் பலமாக ஆட தொடங்கியது. நாங்கள் அனைவரும் செய்வது அறியாமல் பீதியில் கூச்சலிட்டோம். அப்போது விமானம் நின்றது. நாங்கள் அனைவரும் உடனடியாக, அவரச வழிப்பாதை வழியாக குதித்து வெளியேறினோம்.

அப்படி வெளியேறிய பணிகளில் நான்தான் கடைசியாக வெளியேறிய பயணி என நினைக்கிறேன். நாங்கள் அனைவரும் வெளியேறிய அடுத்த நிமிடத்தில் அந்த விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. உடனே அங்கே புகை மண்டலமானது. இதனால் சில பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நல்ல வேளையாக, ஒரு நிமிட இடைவெளியில் நாங்கள் அத்தனைப் பேரும் உயிர் பிழைத்தோம்" என்று அச்சத்துடனேயே தெரிவித்து இருக்கிறார்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ