Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயங்கரவாதிகளை தியாகிகள் எனப் புகழ வேண்டாம்: ராஜ்நாத் சிங்

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று புகழ வேண்டாம் என சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி பேசினார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட எட்டு தெற்காசிய நாடுகள் இணைந்து சார்க் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தொடங்கி வைத்தார். இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் ராஜ்நாத் சிங் உரையாற்றும்போது, ''நமது பிராந்தியத்தின் அமைதிக்கு பயங்கரவாதம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதியாக தெற்காசியா நீடிக்கிறது. பயங்கரவாதிகளை தியாகிகள் என்று புகழ்பாடக் கூடாது. பயங்கரவாதிகளில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் யாரும் கிடையாது.

சமீபத்தில் பதான்கோட், டாக்கா, காபூல் உள்ளிட்ட பகுதிகளில் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தப் பிராந்தியம் சந்தித்தது. பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் வெறுமனே கண்டிப்பது மட்டும் போதாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவதோடு, இந்த அச்சுறுத்தலை முடிவுகட்ட கடும் நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மட்டுமின்றி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறிவரும் நாடுகளையும் தனிநபர்களையும் நாம் தனிமைப்படுத்த வேண்டும். போதை மருந்து வர்த்தகமானது மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்புழக்கத்தை உருவாக்குகிறது. போதை மருந்துக் கடத்தல் என்பதும் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழங்குவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையாக இருக்கிறது.

போதை மருந்து கடத்தலில் கிடைக்கும் பணமானது பயங்கரவாத ஆதரவுக்குப் பயன்படுகிறது. இது நமது பிராந்தியத்தில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்க வாய்ப்புள்ளது. போதை மருந்து கடத்தல் என்பது அனைத்து வகையான குற்றங்களுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. சார்க் நாடுகள் உருவாக்கிய பயங்கரவாதக் குற்றங்கள் கண்காணிப்பை அமைப்பு, போதை மருந்து சார்ந்த குற்றங்கள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்" என்று தெரிவித்து இருக்கிறார்.


இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசும்போது, ''பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் சார்க் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பாடுபடுவதற்கு பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக தேசிய செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

சார்க் பிராந்தியமானது அதிக அளவிலான மனித ஆற்றலும் இயற்கை வளங்களும் நிரம்பியதாக உள்ளது. எனவே இந்த வளங்களை நமது மக்களின் செழுமைக்கும் அமைதிக்கும் அதிக அளவில் பயன்படுத்த சார்க் அமைப்பு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனது சாசனத்தில் இடம்பெற்றுள்ள நோக்கங்களை முன்னெடுப்பதற்காக சார்க் அமைப்பு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ