Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆகஸ்ட் 19 - உலக மனித நேய தினம்... அந்த ஊழியர்களுக்கு நன்றி சொல்வோம்! #World Humanitarian Day

ழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும்... பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட... என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனித நேய தினம்'.

2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும்  ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ, `உலக மனித நேய தினமாக' அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது. 2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில், ஐ.நா-வும் அதன் கூட்டு அமைப்புகளும் முக்கியமான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளன. அதாவது, உலக அளவில் உயிர்வாழ உதவி வேண்டுவோர் 130 மில்லியன் பேர் (13 கோடி). அவர்கள் அனைவருக்கும் உலகமே ஒன்றிணைந்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது ஐ.நா. இந்த ஆண்டுக்கான (2016) கருப்பொருள் `மனிதம் ஒன்றே!' (One Humanity).

இந்தத் தினத்தின் முன்னோட்டமாக, இந்த ஆண்டு, மே மாதம், 23 - 24 தேதிகளில் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில், `உலக மனித நேய உச்சி மாநாடு' நடைபெற்றது. அதில், இடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மனிதாபிமான சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மேலும் ஆர்வத்துடன் பங்கேற்க அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கவும்  பல நாடுகள் முன்வந்திருக்கின்றன.

`மனிதம் ஒன்றே' என்ற கருப்பொருளின் கீழ் உலகம் முழுக்க, மனிதநேய சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை கௌரவிக்கப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையிடத்திலும் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு டிஜிட்டல் பிரசாரத்தையும் நடத்த இருக்கிறது ஐ.நா. அதோடு, இயற்கைப் பேரிடரிலும், போரிலும் பாதிக்கப்பட்டு மீண்டு, உயிர் பிழைத்திருப்பவர்கள் தொடர்பான ஆவணப்படங்களும், புகைப்படக் கண்காட்சியும் நடக்க இருக்கின்றன.

மனித நேய சேவை மகத்தானது. அவர்களுக்கு நாமும் இந்த நாளில் நன்றி சொல்வோம்!

- பாலு சத்யா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ